இன்று முதல் திருப்பதியில் பக்தர்களுக்கு இலவச தரிசன டோக்கன் வினியோகம்…!
திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் வசதிக்காக இன்று முதல் இலவச தரிசன டோக்கன் வழங்கப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய விஷ்ணு நிவாசம், சீனிவாசம் ஆகிய விடுதிகளில் இலவச தரிசன டோக்கன் வழங்கப்பட்டு வந்தது.
கொரோனா தொற்று காரணமாக இந்த டோக்கன் வழங்கும் கவுண்ட்டர்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. இந்த விடுதிகள் அனைத்தும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைத்து தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் மையங்களாக மாற்றப்பட்டது.
தற்போது அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்சில் மட்டுமே இலவச தரிசன டோக்கன் வழங்கப்பட்டு வந்தது. இதற்கிடையே, கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதால், ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது
ஆகையால், பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு திருப்பதியில் இன்று முதல் இலவச தரிசன டோக்கன் வழங்கப்பட உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.