யப்பா.. சாமி…! எவ்ளோ பெரிய வாய்…! கின்னஸ் சாதனை படைத்த பெண்
மிக பெரிய வாயை கொண்டவர் என கின்னஸ் சாதனை ஒன்றை படைத்துள்ளார் அமெரிக்க பெண்.
வாயுள்ள புள்ள பொழைச்சுக்கும் என்று சொல்வது உண்டு. அதாவது கருத்தாக பேசி, கனிவாக நடந்து கொள்பவர்கள் வெற்றி பெறுவார்கள் என்பது இதன் அர்த்தம்.
ஆனால்…வாயை வைத்து ஒரு பெண் கின்னஸ் சாதனை படைத்துள்ளார் என்றால் நம்ப முடிகிறதா..? நாம் நம்பித்தான் ஆக வேண்டும்… காரணம் கின்னஸ் சாதனை சான்றிதழும் அவருக்கு தரப்பட்டு இருக்கிறது.
அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தை சேர்ந்தவர் சமந்தா ரெம்ஸ்டெல். டிக்டாக் பிரபலம். அதற்கு காரணமே இவரின் வாய்தான். சமந்தாவின் வாய் வழக்கமான சாதாரண நபர்களை விட பெரியதாக இருக்கிறது.
ஒரு பெரிய ஆப்பிளை அப்படியே முழுதாக உள்ளே போட்டு கடிக்கும் அளவுக்கு பெரிய வாய் உள்ளது. இப்படிப்பட்ட வாயை வைத்துள்ள அவருக்கு உலகின் பெரிய வாயை கொண்ட நபர் என்று கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ் கிடைத்திருக்கிறது.
இவர் தமது வாயை 6.52 செமீ வரை திறக்கிறார். தமக்கு விருப்பமான உணவை அள்ளி முழுதும் அப்படியே வாயில் அள்ளி போட்டு அசத்தி வருகிறார் சமந்தா. ஒரே நேரத்தில் அனைத்து உணவுகளையும் ‘லபக்கும்’ இவரது வாய் வீடியோவை பார்ப்பவர்கள் வாயை பிளந்து பார்க்கின்றனர் என்பது தான் உண்மை…!