Sunday, May 04 11:56 am

Breaking News

Trending News :

no image

மாம்பழத்தை பழுக்க வைத்த இரட்டை இலை…!


அப்பாடா… லோக்சபா தேர்தலில், தாங்கள் யாருடன் கூட்டணி என்பதை பாமக முடிவு செய்திருக்கிறது. அக்கட்சியியை தங்கள் கூட்டணியில் இழுத்து சாதித்திருக்கிறது அதிமுக.

எந்த அரசியல் கட்சியினரும்(பாஜகவை தவிர) எதிர்பார்க்காத ஒன்றாக அடுத்த மாதம் 19ம் தேதி லோக்சபா தேர்தல் தமிழகத்துக்கு நடக்கிறது. குறைந்த காலமே உள்ள நிலையில், திமுக, அதிமுக உள்ளிட்ட பல கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, ஒப்பந்தம், தேர்தல் பிரச்சாரம் என பரபரக்க ஆரம்பித்துள்ளது.

திமுகவின் கூட்டணி உறுதியாக அடுத்த கட்ட ஆக்ஷனில் அக்கட்சியினர் இறங்கிவிட்டனர். ஆனால் அதிமுகவோ கூட்டணியை இறுதி செய்யாமல் இருக்கிறது. பாஜகவை கிட்டவே விடாமல் வளையம் போட்டு அரசியல் செய்து வரும் அதிமுக, பாமகவை விடாமல் துரத்தியது.

மாம்பழத்தை எப்படியும் கூட்டணிக்குள் கொண்டு வரவேண்டும் என்று பெரும் முயற்சி எடுத்தது. பேச்சுவார்த்தை சுறுசுறுப்பாக தொடங்கி பின்னர் பொசுக்கென்று பிசுபிசுத்தது. பாஜகவுடன் பாமக பேசி வருகிறது, தொகுதிகள் ஓகே ஆகிவிட்டது என பேச்சுகள் உலா வந்தன.

ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லாததால் பாமக கூட்டணி யாருடன் என்பது தெளிவாகாமல் இருந்தது. இப்படிப்பட்ட தருணத்தில் அதிமுகவுடன் கூட்டணி என்று பாமக முடிவு செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மொத்தம் 7 தொகுதிகள் ஒதுக்குவது என்று இருதரப்பிலும் பேசி முடிக்கப்பட்டு உள்ளதாம். நாளை மறுநாள் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அதே நேரத்தில் கேட்ட தொகுதிகள் எண்ணிக்கை இல்லை, அன்புமணிக்கு ராஜ்யசபா பதவி கிடையாது, வழக்கில் விடுதலைக்கு வாய்ப்பே இல்லை என பாஜக தரப்பில் கைவிரிக்கப்பட்டதால் தான் இந்த முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆக மொத்தத்தில் பாமகவின் இந்த முடிவு, பாஜகவுக்கு தான் இழப்பு, அதிமுகவுக்கு ஏக லாபம் என்று கூறுகின்றனர் அரசியல் நோக்கர்கள்…!

Most Popular