கொரோனா பரவ இபிஎஸ் காரணமாம்..! கேஸ் போட்ட திமுக அரசு
சேலம்: முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது சேலம் காவல்துறை 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.
சட்டசபை தேர்தலின் போது திமுக பல்வேறு வாக்குறுதிகளை முன் வைத்தது. அதில் குறிப்பாக நீட் தேர்வு ரத்து, பெட்ரோல்,டீசல் விலை குறைப்பு ஆகியவற்றை சொல்லலாம்.
நீட் தேர்வு எப்படி ரத்து செய்யப்படும் என்று அப்போது ஸ்டாலினிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். நடக்கும்… பாருங்க என்று ஸ்டாலின் பேசினார்.
இப்படி கூறிய வாக்குறுதிகள் ஒரு பக்கம் இருக்க… இவை அனைத்தையும் தமிழக அரசு நிறைவேற்ற தவறிவிட்டது என்று கூறி அதிமுக நேற்று மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தியது.
கொரோனா கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளதால், தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றி போராட்டம் நடத்தப்பட்டது. சேலத்தில் போராட்டத்தை முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார்.
அவருடன் பெண்கள், ஆண்கள் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் பங்கேற்று தமிழக அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். இப்போது போராட்டம் நடத்திய எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 30 பேர் மீது சேலம் போலிசார் கேஸ் போட்டுள்ளனர்.
அதாவது முன் அனுமதியின்றி போராட்டம் நடத்தினார், சட்டத்துக்கு புறம்பாக கூடியது, பேரிடர் காலத்தில், கொரோனா பரவ காரணமாக இருத்தல் என 3 பிரிவுகளில் இந்த வழக்கு பதிவாகி உள்ளது. எடப்பாடி பழனிசாமி மீது மட்டுமல்ல… சேலம் மாவட்டத்தில் மட்டும் 2000க்கும் அதிகமான அதிமுக நிர்வாகிகள் மீது கேஸ் பதிவு செய்யப்பட்டு உள்ளது.