பாஜகவின் ‘பண்ணையார்’ அசைன்மென்ட்… தடதடக்கும் அதிமுக….!
சென்னை: தமிழகத்தில் பாஜக எடுத்துள்ள பண்ணையார் அசைன்மெண்ட்டால் அதிமுக திகிலில் இருப்பதாக ஒரு தகவல் பரபக்க ஆரம்பித்து இருக்கிறது.
யாரும் எதிர்பார்த்தார்களா என்று தெரியவில்லை… இன்னும் சொல்ல போனால் பாஜகவோ எதிர்பார்த்ததா என்பது தெரியவில்லை. தமிழக சட்டசபை தேர்தலில் 4 இடங்களில் பாஜக வென்றிருக்கிறது. அக்கட்சிக்கு கூட்டணியில் 20 இடங்கள் ஒதுக்கப்பட்ட போதே அதிமுக முகாமில் பல வேறான குரல்கள் எழுந்தன.
அதை எல்லாம் ஒரு பக்கம் ஓரம் வைத்துவிட்டு பார்த்தோம் என்றால் பாஜகவில் இப்போது சட்டசபையில் நெல்லை நயினார் நாகேந்திரன், எம்ஆர் காந்தி, வானதி சீனிவாசன், மொடக்குறிச்சி சரஸ்வதி ஆகியோர் எம்எல்ஏக்களாக வெற்றி பெற்றுள்ளனர்.
இவர்களில் யாருக்கு பாஜக சட்டமன்ற தலைவர் பொறுப்பு தரலாம் என்று யோசித்த டெல்லி மேலிடம் சரியாக நயினார் நாகேந்திரனை டிக் செய்து உள்ளதாம். மற்ற 3 பேரோடு ஒப்பிட்டு பார்க்கும் போது கட்சி அடிப்படையில் நயினார் நாகேந்திரன். அப்படி இருக்கும் தருணத்தில் அவருக்கு எப்படி பாஜக சட்டமன்ற தலைவர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது என்பதில் உள்ள ஸ்கெட்சை விவரிக்கின்றனர் முக்கிய நிர்வாகிகள்.
இப்போது உள்ள எம்எல்ஏக்களில் 2 சீனியர்களான நாகர்கோவில் எம்ஆர் காந்தி, வானதி சீனிவாசன் ஆகிய இருவரையும் அப்படியே ஓரமாக வைத்துவிட்டு நயினாருக்கு பொறுப்பு அளிக்கப்ப்டடுள்ளதே ஒரு பண்ணையார் அசைன்மென்ட் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். தற்போது பாஜகவில் ஐக்கியம் என்றாலும் அதிமுகவில் உள்ள பல எம்எல்ஏக்கள், கட்சிகளில் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்களிடம் இன்னமும் ‘டச்’சில் இருப்பவர் நயினார்.
அவரை வைத்து தான் அதிமுகவில் உள்ள பல முக்கியஸ்தர்களை அப்படியே பாஜகவில் ஐக்கியமாக வைப்பதுதான் அந்த பிளான் என்று போட்டு உடைக்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள். எப்படியாவது அதிமுகவில் உள்ளவர்களை தாமரைக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்று நயினாரிடம் அசைன்மென்ட் தரப்பட்டு இருக்கிறதாம். இந்த திட்டத்தை என்றோ பாஜக டெல்லி தலைமை டிசைன் செய்துவிட்டதாம்.
அதுபற்றிய ஒரு சின்ன பிளாஷ்பேக்கையும் விவரிக்கின்றனர். தமிழகத்தில் பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடும் முன்னதாகவே நெல்லை தொகுதியில் பாஜக வேட்பாளராக நயினார் நாகேந்திரன் மனு தாக்கல் செய்தார். பண்ணையார் அசைன்மெண்ட்டையும் இதையும் ஒன்றுடன் ஒன்று முடிச்சு போட்டு என்ன சரிதானே என்கிற கணக்கில் பார்க்கின்றனர் பாஜக முக்கியஸ்தர்கள்.
நெல்லை பகுதியில் நயினார் நாகேந்திரனுக்கு பண்ணையார் என்ற பெயர் உள்ளது அனைவருக்கும் தெரியும். அந்த பெயர் சொல்லித்தான் இன்னமும் பலர் அழைத்து வருகின்றனர். இந்த பண்ணையார் அசைன்மென்ட் படிப்படியாக அரங்கேறும் என்று கூறப்படும் நிலையில் அனைத்தையும் அதிமுக கண் கொத்தி பாம்பாக பார்த்துக் கொண்டிருக்கிறது என்கின்றனர் சீனியர்ஸ். தகுந்த நேரத்தில் தமது ஆட்டத்தை அதிமுகவும் ஆரம்பிக்கும் என்றும் தகவல்கள் உலா வருகின்றன.