அருமை நண்பர் திரு.வசந்தகுமார்…! சூப்பர் ஸ்டார் இரங்கல்
சென்னை: காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கொரோனா காரணமாக கடந்த 10ம் தேதி சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு நிலையில் உடல்நிலை நேற்று மேலும் மோசம் அடைந்தது.
இந் நிலையில் நேற்று மாலை அவர் காலமானார். அவரது மறைவு காங்கிரஸ் கட்சிக்கும், அதன் தொண்டர்களுக்கும் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வசந்தகுமார் மறைவுக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
திரையுலகத்தினரும் இரங்கல் வெளியிட்டுள்ளனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தமது டுவிட்டரில் கூறி இருப்பதாவது:
அருமை நண்பர் திரு.வசந்தகுமார் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. அவர் குடும்பத்தாருக்கும், அவரைச் சார்ந்த அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் என்று கூறி உள்ளார்.