ரேஷன் கடைகளில் நாளை ரூ. 2000 கொரோனா நிவாரண நிதி கிடைக்குமா..?
சென்னை: தமிழகம் முழுக்க நாளை ரேஷன் கடைகளில் ரூ.2000 கொரோனா நிதி பெறலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ரேஷன் அட்டை பயனாளிகளுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.2000 தரப்படுகிறது. அதற்கான டோக்கன் கொடுக்கும் பணிகள் வீடு, வீடாக வழங்கப்பட்டு வருகின்றன. நியாயவிலை கடை ஊழியர்கள் அந்தந்த பகுதிகளுக்கு சென்று ரேஷன் கார்டு எண் அடிப்படையில் டோக்கன்களை வினியோகித்து வருகின்றனர்.
நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் ரேஷன் கடைகளில் ரூ. 2000 வினியோகிக்கப்படுமா என்ற கேள்விகள் எழுந்தன. இந் நிலையில் நாளை ரேஷன் கடைகள் திறந்திருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள தமிழக அரசு கூறி இருப்பதாவது:
16/05/2021, 23/05/2021 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஏற்கனவே 16/05/2021 அன்று முதல் தவணையாக கொரோனா நிவாரணத் தொகை ரூபாய் 2,000 வழங்குவதற்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.
எனவே, குடும்ப அட்டைதாரர்களின் நலன் கருதி, 16/05/2021 அன்று நிவாரண உதவிப் பெறுவதற்கு டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ள குடும்ப அட்டைத்தாரர்கள் மட்டும், ரூபாய் 2,000 கொரோனா நிவாரணத் தொகையை 16/05/2021 அன்று காலை 08.00 மணிமுதல் பகல் 12.00 மணிவரை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.