எஸ்பி வேலுமணிக்கு அடுத்தடுத்து சிக்கல்…! உறவினர் வீட்டில் சிக்கிய ‘அந்த’ விஷயம்
சென்னை: முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் உறவினர் வீட்டில் சிக்கிய வரவு செலவு நோட்டு புத்தகம் தொண்டர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கி இருக்கிறது.
யாரும் எதிர்பார்க்கவில்லை… இன்று காலை 6 மணி முதலே கோவையில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் சுகுணாபுரம் இல்லம், அவரது உறவினர்கள் வீடுகள், அலுவலகங்களில் அதிரடியாக புகுந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஒரே நேரத்தில் கோவை மட்டுமல்லாது, சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 53 இடங்களில் இந்த ரெய்டு நடைபெற்று வருகிறது.
சோதனை இன்னமும் முடிந்தபாடில்லை….. தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. சோதனையை ஒரு பக்கம் அதிமுக தலைமையும், தொண்டர்கள் கண்டித்தாலும் ரெய்டு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
சென்னை எம்எல்ஏ ஹாஸ்டலில் வேலுமணியிடம் ஒரு பக்கம் விசாரணை நடக்க… நடக்க அதே நேரத்தில் ஒட்டு மொத்தமாக ஒரே நேரத்தில் அதிகாரிகள் வலம் வருவதை அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது என்று கூறுகின்றனர் விவரம் அறிந்தவர்.
கோவையில் உள்ள அவரது உறவினரும், அதிமுக பிரமுகருமான சந்திரசேகரின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி இருக்கின்றனர். அவரது வீட்டில் இருந்த பணவரவு, செலவு பற்றிய முக்கிய ஆவணத்தை லஞ்ச ஒழிப்புத்துறையினர் லட்டு மாதிரி கைப்பற்றி உள்ளனராம்.
இதுபோன்று சோதனை நடத்திய பல பகுதிகளிலும் எதிர்பார்த்ததை விட முக்கிய ஆவணங்கள் சிக்கியிருப்பதாக அதிகாரிகள் தரப்பில் இருந்து தகவல்கள் கசியவிடப்பட்டு உள்ளன. கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் தான் அடுத்த கட்ட விசாரணை நகரும் என்றும் அவர்கள் கண்சிமிட்டுகின்றனர். ஆக மொத்தம்…. சோதனையோடு இந்த விவகாரம் முற்று பெறாது என்றே தோன்றுகிறது…!