எனக்கு முன் ஜாமீன் வேணும்..! கோர்ட் படியேறிய வாய்கொழுப்பு எஸ்வி சேகர்
சென்னை: தேசிய கொடியை அவமதித்த வழக்கில் பாஜக பிரமுகர் எஸ் வி சேகர் முன் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
பாஜக பிரமுகர், நடிகர் என பன்முகம் கொண்ட எஸ்.வி.சேகர் சமீபகாலமாக தமிழக அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். அரசுக்கு எதிராகவும், அதன் செயல்பாடுகளை பற்றியும் விமர்சித்து வருகிறார்.
அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. முதலமைச்சருக்கு பதிலளித்த போது, அவர் தவறான தகவல்களை வெளியிட்டு தேசிய கொடியை அவமதித்ததாக புகார்கள் எழுந்தன.
அதாவது, தேசிய கொடியில் உள்ள காவி நிறத்தை எடுத்துவிட்டு முதலமைச்சர் கொடியேற்றுவாரா என்று கேள்வி எழுப்பினார். அவரது இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. உள்நோக்கத்துடன் மத துவேஷத்தை தூண்டும் வகையில் அவர் பேசி இருப்பதாக கூறப்பட்டது.
அவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன. இதையடுத்து, தம்மை கைது செய்யாமல் இருக்க எஸ் வி சேகர் சென்னை ஐகோர்ட்டில் முன் ஜாமீன் மனு ஒன்றை தாக்கல் செய்து இருக்கிறார். விரைவில் இந்த மனு விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.