ஆளுநராகிறார் ரஜினிகாந்த்…? பாஜகவின் ஆபரேஷன் தமிழ்நாடு…!
டெல்லி: நடிகர் ரஜினிகாந்தை விரைவில் ஆளுநராக நியமிக்க பாஜக அரசு முடிவு செய்துள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் அரசியல்வாதிகளுக்கு இணையாக எது செய்தாலும் பரபரப்பாக பேசப்படுவர் நடிகர் ரஜினிகாந்த். எங்கே, யாரை சந்தித்தாலும் அன்று அவர் தான் தலைப்புச் செய்தி.
சினிமாக்கள், விழாக்கள் என எங்கேயாவது போய்விட்டு வந்தால் அவர் என்ன பேசினார் என்பதை அறிய பலரும் ஆர்வமாக இருப்பது தெரிந்த ஒன்று.
அண்மையில் டெல்லி சென்றார், பிரதமரை சந்தித்தார், தமிழகம் வந்தார் ஆளுநர் ரவியை சந்தித்தார், அரசியல் பேசினார். தமிழக அரசியல் களம் மட்டுமல்ல, தேசிய அரசியல் களமே பரபரத்தது.
ஆளுநரிடம் அரசியல் பேசினேன் என்று பேட்டியளித்தது பெரும் பரபரப்பானது. என்ன பேசியிருக்கக்கூடும் என்று தெரியாத நிலையில் ஊகமாக பல செய்திகள் வெளியாகின.
இப்போது ஒரு தகவல் பாஜக தரப்பில் இருந்து வெளியே சொல்லப்பட்டு இருக்கிறது. அதுவும் நடிகர் ரஜினிகாந்தை பற்றி தான்.. கூடிய விரைவில் அவர் ஆளுநராக நியமிக்கப்பட உள்ளார் என்பது தான்.
தமிழகத்தில் எப்படியாவது கால்பதித்து விட வேண்டும் என்பதில் படு உறுதியாக இருக்கும் பாஜக, அதற்கான திட்டமிடுதல்களை பல ஆண்டுளாக செய்து வருகிறது. ஆனால், ஆட்சி கட்டிலில் கால் வைக்கமுடியாத மாநிலம், கால் வைக்கவும் முடியாது என்று எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.
இந்த நிலையை மாற்ற பல பிளான்களை பாஜக தரப்பில் இருந்து வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அதன் ஒரு முக்கிய அம்சமாக பாஜகவின் ஆதரவாளர், மோடி, அமித் ஷா நண்பர் என்று அடையாளம் காட்டப்பட்ட நடிகர் ரஜினியை பயன்படுத்திக் கொள்வது தான்.
எனது உடல்நிலை ஒத்துழைக்காது, அரசியலுக்கு வரமாட்டேன் என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டு, படப்பிடிப்புகளில் பிசியாக இருக்கிறார். இப்படி ஒரு தருணத்தில் தான் ஆளுநர் ரவியுடனான சந்திப்பால் தமிழக அரசியல் களத்தை பாஜக சூடேற்றியது.
இப்போதும் அதேபோல ஒரு சம்பவத்தை செய்ய பாஜக தயாராகிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது பாஜக ஆதரவாளரான ரஜினிகாந்தை எப்படியாவது ஒரு மாநிலத்தின் ஆளுநராக ஆக்கிவிடுவது என்பது தான்.
அதற்கான முயற்சிகளின் ஒரு கட்டமாக பிரபல தேசிய செய்தி தொலைக்காட்சி ஒரு முக்கிய செய்தியை வெளியிட்டு பரபரப்பை கிளப்பி இருக்கிறது. நடிகர் ரஜினிகாந்தை ஆளுநராக அறிவிப்பது என்ற முடிவை மத்திய அரசு எடுத்துவிட்டதாகவும், குறிப்பாக அவர் தமிழக ஆளுநராக நியமனம் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தாமரையை மலர வைக்கவும், பாஜகவின் வளர்ச்சிக்கு அவர் உறுதுணையாக இருப்பதோடு , ரஜினிக்கு பாஜக ஏதாவது செய்தாக வேண்டும் என்று விரும்புவதாகவும் செய்தி வெளியிடப்பட்டு உள்ளது.
தமிழகத்தின் ஆளுநராக அவரை நியமித்து தமிழகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர பாஜக தீர்மானித்து இருப்பதாகவும் அந்த செய்தி வெளியாகி இருக்கிறது.
அதே நேரத்தில் சொந்த மாநிலத்தில் ஒருவர் ஆளுநர் ஆக முடியாது என்பது சட்ட விதியாகும். அப்படி இருக்கும் போது எப்படி ரஜினிகாந்த் ஆளுநராக அறிவிக்கப்படுவார் என்று கேள்விகள் முன் வைக்கப்படுகின்றன. அதற்கும் பதில் இருக்கிறது…
அதாவது, சரோஜினி நாயுடுவின் கணவர் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர். ஆனால் அவரது மகள் பத்மஜா நாயுடு அதே மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். பஞ்சாப்பை சேர்ந்த உஜ்ஜல் சிங், அம்மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டசம்பவங்களும் முன் உதாரணமாக இருக்கின்றன.
எனவே இதை சுட்டிக்காட்டும் அரசியல் திறனாய்வாளர்கள், அதே போன்று இப்போதும் நடக்கலாம், வாய்ப்புகள் அதிகம் என்றே தகவல்கள் கூறுகின்றன. தமிழகத்தின் ஆளுநர் அல்ல… கர்நாடகாவின் ஆளுநராக முதலில் நியமித்து, பின்னர் அடுத்தக்கட்ட ஆபரேஷனை தொடங்கலாம் என்று பாஜக திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
அதாவது, கர்நாடகா மாநிலத்தின் ஆளுநராக ரஜினிகாந்தை நியமித்து விட்டு, தமிழக ஆளுநர் பொறுப்பை வழங்கலாமே என்பது தானாம்…! தெலுங்கானா மாநில ஆளுநர், அருகில் உள்ள புதுச்சேரிக்கு துணைநிலை ஆளுநராக பொறுப்பு வகிக்கவில்லையா? அதுபோலவே இப்போதும் நடக்கலாம் என்பது தான் டெல்லியில் இருந்து கசியவிடப்படும் தகவல்கள்.
ஆனால் இதுபோன்ற செய்திகள் எல்லாம் baseless… உண்மையில்லை, ரஜினியின் கைவசம் படம் உள்ளது, மேலும் பல கதைகள் கேட்டு ஓகே சொல்லி உள்ளார், எனவே இப்போதைக்கு அதற்கு வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
எதிர்க்கட்சிகள் தரப்பில் இத்தகைய செய்திகள் எந்த மாதிரியான தருணத்தில் கசிய விடப்படுகின்றன என்பதை பார்க்க வேண்டும் என்று சுட்டிக் காட்டுகின்றனர். தற்போது தேசிய அளவில் பெரிதும் பேசப்படும் விவகாரம் பிடிஆரும், இலவசங்களுக்கு எதிராக மத்திய அரசை அவர் காய்ச்சி எடுத்து பேசிய பேச்சுகளும் தான்…!
பிரதமர் மோடியையே நேரிடையாக அவர் அட்டாக் செய்து செய்தி தொலைக்காட்சி ஒன்றில் பேசியிருப்பது, தேசிய ஊடகங்களில் இப்போதும் வைரலாகி வருகிறது. எதிர்க்கட்சிகளிடம் இருந்தும் கண்டனங்கள் பதிவாகி உள்ளன.
இத்தகைய விஷயங்களில் இருந்து மக்களையும், ஒட்டு மொத்த ஊடகங்களையும் திசைதிருப்பவே ஆளுநர் ரஜினிகாந்த், அதுவும் தமிழ்நாட்டுக்கு ஒரு அவுட்லைனை கசிய விட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. எதுவும் உறுதியாகாத நிலையில் அதுபற்றிய விவரங்களே அதிகம் பேசப்பட்டு கொண்டிருக்கின்றன என்பதுதான் உண்மையே…!