அந்த தண்ணி, எந்தண்ணி இல்ல...! ரணகள ராஜஸ்தான் அரசியல் பற்றி பாஜக..!
ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுக்கவில்லை என்று பாஜக தெரிவித்துள்ளது.
ஆளில்லாவிட்டாலும் ஆட்சியை பிடிப்பதில் பாஜகவுக்கு நிகர் பாஜக தான். அரியணை போட்டியில் தோற்றாலும் அதை எப்படியாவது மீட்டெடுக்க சமயம் பார்த்துக் கொண்டிருப்பது அதன் அரசியல் சாணக்கியத்தனம்.
அதற்கு ஏற்ப ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசை சச்சின் பைலட் மூலம் கவிழ்க்க பார்க்கிறது. பதவி போட்டிக்காக சச்சின் பைலட், அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் போர்க்கொடி உயர்த்தினாலும் அதற்கு நாங்கள் காரணம் இல்லை என்று இப்போதும் பாஜக கூறி வருகிறது. சச்சின் பைலட், ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம், கோர்ட் தடை என்று காட்சிகள் பரபரபவென்று மாறி வருகின்றன.
உச்சக்கட்ட அரசியல் குழப்பம் நிலவ சட்டசபையை உடனே கூட்ட வேண்டும் என்று முதலமைச்சர் அசோக் கெலாட் கோரிக்கை விடுத்து வருகிறார். ஆனால், கெலாட் கோரிக்கைக்கு ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா ஒப்புக்கொள்ளவே இல்லை.
இந்த காட்சிகள் அப்படியே இருக்க, ராஜஸ்தான் பாஜக தலைவர்கள் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை சந்தித்தனர். பிறகு செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர்களில் ஒருவரான ராஜேந்திர ரதோர் கூறியதாவது:
மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி கொண்டு வரவேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைக்கவில்லை. இப்போது நிலவுவது அவர்களின் (காங்கிரஸ்) உட்கட்சி பிரச்னை.
கொரோனாவை காரணம் காட்டி சட்டசபையை காங்கிரஸ் ஒத்திவைத்தது. இப்போது, அதனை கூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர் என்றார்.