Sunday, May 04 12:07 pm

Breaking News

Trending News :

no image

விஜயகாந்த் வீட்டில் ஸ்டாலின்…! வெளியான பின்னணி காரணம்…?


சென்னை: தேமுதிக நிறுவனர் விஜயகாந்தை அவரது வீட்டுக்கு சென்றே முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சந்தித்து பேசியது அரசியல் களத்தில் பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது.

ஞாயிறு…. உலகத்துக்கே விடுமுறை என்று சொல்லலாம். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் தமிழக அரசியல் வட்டாரம் காலையிலே பரபரப்பானது. தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு பற்றி இப்போது முக்கிய பேச்சாக இருக்கிறது.

சென்னையில் விஜயகாந்தின் வீட்டுக்கே சென்று முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். அவரது உடல்நலம் விசாரித்தார். உடல்நிலை ஒத்துழைக்காத காரணத்தால் விஜயகாந்த் அரசியலில் ஆக்டிவ்வாக இல்லை என்பது அனைவரும் அறிந்த விஷயம்.

இந்த சந்திப்பில் கொரோனா நிவாரண நிதியாக 10 லட்சம் ரூபாயை முதல்வரிடம் வழங்கி இருக்கிறார் விஜயகாந்த். ஸ்டாலினை கண்ட மகிழ்ச்சியில் அவர் கைகளை கெட்டியாக பிடித்துக் கொண்டார் விஜயகாந்த்.

முழுக்க, முழுக்க இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானதே என்று கூறப்பட்டாலும் வேறு சில காரணங்களும் வந்து விழுகின்றன. சட்டசபை தேர்தல் முடிந்துவிட்டது… இனி தமிழகத்தில் அடுத்து வரிசையில் இருப்பது உள்ளாட்சி தேர்தல்.

இந்த உள்ளாட்சி தேர்தலுக்கு கூட்டணியாக இந்த சந்திப்பு மாறுமோ என்று எண்ண அலைகளை சந்திப்பு ஏற்படுத்தி விட்டதாகவே அனைவரும் பார்க்கின்றனர். அதாவது சட்டசபை தேர்தலில் அமமுகவுடன் கூட்டணி வைத்து மரண அடி கிடைத்தது தேமுதிகவுக்கு.

தேர்தல் முடிந்த பின்னர், அமமுகவுடன் கூட்டணியை தேமுதிக தொடர்கிறதா என்ற சந்தேகம் இரண்டு கட்சியினருக்கும் இன்னமும் உள்ள நிலையில் இந்த சந்திப்பு அரங்கேறி உள்ளது. இனி அதிமுகவுடனும் கூட்டணி வைக்க முடியாது.

ஒரே சாய்ஸ் திமுக கூட்டணிதான்… தேமுதிகவின் மனநிலை இப்படி இருப்பதாகவும், அதை பயன்படுத்தி கொள்ளும் முயற்சியாக திமுகவின் நடவடிக்கை தான் இதுவா என்று கேள்விகள் வெகு இயல்பாகவே எழ ஆரம்பித்து உள்ளன. அதாவது உள்ளாட்சி தேர்தலின் போது தேமுதிக, திமுக கூட்டணிக்குள் செல்லும் வாய்ப்புகளை இந்த சந்திப்பு அதிகப்படுத்தி உள்ளதாகவே கூறப்படுகிறது.

உள்ளாட்சி தேர்தலில் பாமகவுக்கு எதிராக களம் இறக்கும் வாய்ப்பாகவும் இந்த சந்திப்பை அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். எனவே, இந்த சந்திப்பை வெகு இயல்பான சந்திப்பாக எடுத்துக் கொள்ள முடியாது என்று புன்முறுவலிக்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

Most Popular