29 காசுதான்.. நிம்மியை நெம்பிய தங்கம்
சென்னை; 1 ரூபாய் வரியாக தந்தால் 29 காசுதான் தமிழ்நாட்டுக்கு நிதியாக வருகிறது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி தந்திருக்கிறார்.
அதிக வரி தரும் மாநிலமான தமிழகத்துக்கு மத்திய அரசு தரும் நிதி பெரும் குறைவு. குறைவான வரிவருவாய் ஈட்டும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு தாராளமான நிதி.
மத்திய அரசின் இந்த பாராமுகம், தமிழக அரசியல் களத்தில் பெரும் கண்டனங்களை எழுப்பி இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் இருந்து மத்திய அரசு பெற்ற வரியை விட, கொடுத்த நிதி அதிகம் என்பது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாதம்.
இதற்கு புள்ளி விவரங்களுடன் பதில் தந்திருக்கிறார் அமைச்சர் தங்கம் தென்னரசு. இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: 2014 முதல் 2023 வரையான ஆண்டு காலத்தில் மத்திய அரசு தமிழகத்துக்கு தந்திருப்பது 4.75 லட்சம் கோடி. 2.46 லட்சம் கோடி மத்திய வரி பகிர்வு, 2.28 லட்சம் கோடி மானியம் என தரப்பட்டு உள்ளது.
நேரடி வரி வருவாய் 6.23 லட்சம் கோடி, மறைமுக வரி பற்றி எந்த புள்ளி விவரங்களும் மத்திய அரசு தரவில்லை. தமிழகத்தில் இருந்து வரியாக செலுத்தப்படும் 1 ரூபாய்க்கு நமக்கு திருப்பி நிதியாக தரப்படுவது 29 காசுகள் தான். பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்களில் இந்த நிதியில் பெரும் வித்தியாசம் காணப்படுகிறது என்று குறிப்பிட்டு உள்ளார்.
இதுதவிர மெட்ரோ ரயில் திட்டம், வெள்ள நிவாரணம் குறித்தும் அமைச்சர் தங்கம் தென்னரசு புள்ளி விவரங்களுடன் கூறி இருக்கிறார். அதன் முழு வீடியோவை இந்த செய்தியின் கீழே வீடியோ இணைப்பாக காணலாம்;