சீமான் போட்டியிடும் தொகுதி இதுதான்..! 'ரகசியத்தை' வெளியிட்ட நாம் தமிழர் தம்பிகள்
சென்னை: காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் சீமான் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது. அதிமுகவில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். திமுகவும் தேர்தல் பணிகளில் வேகம் எடுக்க தொடங்கி உள்ளது.
நாம் தமிழர் கட்சியினரும், சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டி என அறிவித்துவிட்டு, தொகுதி வாரியாக களப்பணியாற்றி வருகின்றனர். இந் நிலையில் காரைக்குடி தொகுதியில் போட்டியிட சீமான் முடிவு செய்து உள்ளதாக நாம் தமிழர் கட்சி தலைமை நிர்வாகிகள் கூறுகின்றனர்.
2016ம் ஆண்டு தேர்தலில் சீமான் கடலூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இம்முறை தென்மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
அதற்கேற்ப தமது சொந்த மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்தில் போட்டியிடலாமா, அண்டை மாவட்டமான சிவகங்கை மாவட்டத்தில் போட்டியிடலாமா என்று ஆலோசனை மேற்கொண்டு வருகிறார் என்று கூறப்படுகிறது. அநேகமாக காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் சீமான் போட்டியிட முடிவு செய்துள்ளதாக நாம் தமிழர் கட்சியினர் தகவல் தெரிவித்துள்ளனர்.