தம்பட்டம் அடிங்க… ஆனா இப்படி பேசாதீங்க..! நிர்மலா சீதாராமனை விளாசும் திருமா
டெல்லி; தம்பட்டம் அடிங்க… அதுக்காக இழிவாக பேசாதீங்க என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, விசிக தலைவரும் எம்பியுமான திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையில் விலைவாசி உயர்வு பற்றி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். அவர் பேசிய விவரம்: உலக நாடுகளே பொருளாதாரத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. ஆனாலும் இந்தியாவின் வளர்ச்சி தொடர்கிறது.
கொரோனா தொற்று, ரஷ்யா, உக்ரைன் நாடுகள் இடையே போர் ஆகிய நெருக்கடிக்கு இடையில் பணவீக்கத்தை 7 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. பொருளாதார மந்தநிலையில், தேக்க நிலையில் உள்ளதாக கேள்வியே இல்லை என்று தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரத்தை மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டு நிர்மலா சீதாராமன் பேசியது பெரும் விமர்சனங்களில் கொண்டு போய் விட்டுள்ளது. அவரின் பேச்சை கண்டித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள சுப்ரமணியன் சுவாமி, இந்தியாவில் கடந்தாண்டே பொருளாதார மந்தநிலை வந்துவிட்டது. ஆகையால் இப்போது நாடு பொருளாதார மந்தநிலையில் உள்ளதா என்ற கேள்விக்கு இடமில்லை என்று கூறி உள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பேச்சுக்கு விசிக தலைவரும் எம்பியுமான திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறி உள்ளதாவது:
விலைவாசி உயர்வு தொடர்பான விவாதத்திற்கு விடையளித்த அமைச்சர் @nsitharaman அவர்கள், பொருளாதார நிலை குறித்து இந்தியாவை அண்டை நாடுகளோடு ஒப்பீடு செய்தார். அப்போது இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகியநாடுகள் IMF மற்றும் பிறநாடுகளிடம் கையேந்துகின்றன என குறிப்பிட்டார்.
நம்மைப் பற்றித் தம்பட்டமடிப்பது சரி. ஆனால், ஒரு பொறுப்புள்ள பதவியில் இருப்பவர் உலகமே உற்றுக் கவனிக்கக் கூடிய ஒரு அவையில் பிற நாடுகளை இழிவு செய்வதுபோல பேசியது அரசியல் நாகரிமா? கையேந்துகிறார்கள் என்பது நாடாளுமன்றத்தில் அனுமதிக்கப்படும் (parliamentary words) சொற்களா? தெளிவு படுத்துவார்களா?
விலைவாசி உயர்வு, பட்டினிச் சேவைகள் போன்றவை மக்களை வாட்டி வதைக்கும் நிலையில், இந்தியா எல்லாவற்றிலும் தன்னிறைவு பெற்று விட்டதைப் போல தம்பட்டமடிப்பது நெருடலாக உள்ளது. உலகமே கவனித்துக் கொண்டிருக்கும் மக்களின் அவையில் இவ்வாறு பிறநாடுகளைக் கேலி செய்வது அரசியல் நாகரிகமா? எனும் கேள்வி எழுகிறது என்று கூறி இருக்கிறார்.