ராஜேந்திர பாலாஜி இப்போது எங்கே..? எடப்பாடி சொன்ன சீக்ரெட்
சேலம்: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எங்கே என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.
அதிமுக ஆட்சியில் மட்டுமல்ல… திமுக ஆட்சியிலும் அதிக முறை அனைத்து தரப்பினராலும் உச்சரிக்கப்பட்ட பெயர் என்றால் அது ராஜேந்திர பாலாஜியின் பெயராக தான் இருக்கும். அந்தளவுக்கு சர்ச்சை பாலாஜியாக இருந்தார்.
ஊடகங்களில் ஒவ்வொரு பேட்டியின் போது திமுகவை வாரிவிடுவதும், பாஜகவை ஏகபோகமாக பாராட்டியும தள்ளி இருக்கிறார். அவரது மோடி புராணம் பற்றி பாஜகவினரே அசந்து போனது உண்டு.
ஆனால் இப்போது நிலைமை தலைகீழ். அவர் மீதான வழக்குகளின் பிடி இறுகி வருகிறது. திமுக அரசில் எப்படியும் அவருக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகள் தொடரும் என்று தகவல்கள் வெளியான நிலையில் திடீரென கடந்த 2 நாட்களாக பரபர தகவல்கள் வெளியாகின.
டெல்லியில் முகாமிட்டு உள்ள அவர் பாஜகவில் இணைய முயற்சித்து வருகிறார், தமக்கான பாதுகாப்பை தேடி கொள்ள முடிவெடுத்துவிட்டார் என்று தகவல்கள் பரபரத்தன.
ஒட்டு மொத்த தகவல்களுக்கும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். சேலத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இது குறித்து கருத்த தெரிவித்து உள்ளார்.
எடப்பாடி பழனிசாமி கூறி இருப்பதாவது: ராஜேந்திர பாலாஜி எங்கேயும் போகவில்லை. நான் அவரிடம் பேசிவிட்டேன். அவர் அதிமுகவில் தான் இருக்கிறார். பாஜகவில் இணைய மாட்டார். சொந்த வேலையாக தான் டெல்லி சென்றிருக்கிறார்.
அதிமுக ஆட்சி காலத்தில் நிதி நிலை மோசம், சீர்கேடு நடைபெற்றது என்று கூறுவது முற்றிலும் தவறானது. மின்சார பொருட்கள் விலை அதிகரித்தாலும் மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை, டீசல் விலை உயர்ந்த போது பேருந்து கட்டணம் உயர்த்தப்படவில்லை என்று கூறினார்.