Sunday, May 04 12:30 pm

Breaking News

Trending News :

no image

ஹெல்மெட் திருடிய நாய் நபர்கள்…! 'பைக்' ஓட்டியின் குசும்பு அறிவிப்பு…!


கோவை: கோவையில் ஹெல்மெட்டை திருடிய நாய் நபர் உடனடியாக அதை வண்டியில் போடவும் என்று ஒட்டப்பட்டு உள்ள அறிவிப்பு வைரலாகி உள்ளது.

பொது இடங்களில் நாம் செல்லும் போது நமது உடமைகளை பத்திரமாக வைத்து கொள்ளவேண்டும். பேருந்து நிலையம், ரயில் நிலையம், மால்கள், ஓட்டல்களில் இது குறித்து அறிவிப்புகள் ஆங்காங்கே ஒட்டப்பட்டு இருக்கும்.

ஆனாலும் மக்களிடையே இருக்கும் அஜாக்கிரதையால் அவர்கள் தங்களின் பொருட்களை பறி கொடுத்துவிடுவர். அப்படித்தான் கோவையை சேர்ந்த ஒருவர் தமது ஹெல்மெட்டை திருட்டு கொடுத்துவிட்டார்.

கோவை தெற்கு தாலுகா அலுவலகத்தில் தான் இந்த திருட்டு சம்பவம் நடந்துள்ளது. அங்கு ஒருவர் இரு சக்கர நிறுத்துமிடத்தில் தமது பைக்கை பார்க் செய்துவிட்டு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து அவர் வந்து பார்க்கும் போது பைக்கில் விட்டு சென்ற ஹெல்மெட் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

யாரோ லவட்டிக் கொண்டு போனதால் ஆத்திரம் மண்டைக்கு ஏறியது. ஹெல்மெட் பறிபோனதை அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை. உடனடியாக அவர் செய்த ஒரு காரியம் தான் இப்போது வைரலாகி இருக்கிறது.

எந்த இடத்தில் ஹெல்மெட் திருடுபோனதோ அங்கு ஒரு பேப்பரில் ஒரு அறிவிப்பை வெளியிட்டு அங்கிருக்கும் சுவற்றில் ஒட்டி சென்று உள்ளார். அதில் எழுதப்பட்டு இருந்த வரிகள் இதுதான்:

TN 99 T 3276 என்ற வண்டியில் இருந்த ஹெல்மெட்டை கவ்விச் சென்ற நாய்கள்/ நபர்கள் அந்த ஹெல்மெட்டை வண்டியில் போடவும் என்று எழுதி ஒட்டி உள்ளார். அவரது இந்த அறிவிப்பு வேகமாக பலருக்கும் பகிரப்பட்டு வருகிறது. கோயமுத்தூர்காரங்க… குசும்புக்காரங்க என்று கேள்விப்பட்டு இருப்போம்… அதை இப்போது ருசுப்படுத்தி இருக்கின்றனர் என்று சொல்லலாம்…!

Most Popular