ஸ்டாலின் ஊரு...! Water இருக்கா பாரு...! #சென்னையை_ மீட்ட_ திமுக
சென்னை: தலைநகர் சென்னையில் பலத்த மழை எதிரொலியாக தேங்கிய வெள்ளநீர் வெளியேற்றப்பட்டு சாலைகளில் போக்குவரத்து சீரடைந்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த சில நாட்களாக பரவலாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி வருகிறது. சென்னையில் விடிய, விடிய மழை பெய்து தள்ளியது.
நகரின் முக்கிய பகுதிகளான கோடம்பாக்கம், சைதாப்பேட்டை, வடபழனி, எழும்பூர், தி நகர், பெரம்பூர் என பல பகுதிகளில் மழை வெள்ளம் மக்களை பாடாய்படுத்தியது. சாலைகளில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து நெருக்கடி, வாகனங்கள் பழுது என மக்கள் கடும் அவஸ்தைக்குள்ளாகினர்.
மழைநீர் பல இடங்களில் தேங்கி நிற்க, மக்கள் நடமாட்டம் மிகுந்த சுரங்கபாலங்கள் நீரில் மூழ்கின. மழையின் வேகம் தீவிரம் அடைய, அங்கே மழை, இங்கே வெள்ளம், மக்கள் அவதி என ஆளாளுக்கு கருத்துகள், விமர்சனங்களை அரசுக்கு எதிராக வைத்து திமுகவை வெளுத்து கட்ட ஆரம்பித்தனர்.
பெய்யென பெய்யும் மழை என பெய்தே தள்ளிய மழையின் தீவிரத்தை உணர்ந்த அமைச்சர்கள், மாநகராட்சி அதிகாரிகள் பல நேரிடையாகவே களத்துக்கு சென்று ஆய்வு பணிகளை முடுக்கிவிட்டனர். இரவு நேரம் என்ற போதிலும் மாநகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் துரித நடவடிக்கையில் இறங்கினர்.
ஆனால், சமூக வலைதளங்களில் மழைநீர் வடியவில்லை, அரசின் மெத்தனப் போக்கு, வடிகால் வசதிக்காக மேற்கொள்ளப்பட்ட பணம் அம்பேல் என பேச்சுகள் லைன் கட்டி வந்தன. இதையடுத்து, திமுக அபிமானிகள் வெகுண்டு எழுந்து தங்கள் பகுதிகளில் உள்ள மழை நிலவரத்தை இன்று காலை நேரத்தில் படம்பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளனர்.
சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் மழைநீர் இல்லை.. அதிகாரிகளுக்கு ஒரு சபாஷ் என்று போட்டோக்களை பதிவிட்டு பதிலடி கொடுத்துள்ளனர்.
குறிப்பாக கொளத்தூர் தொகுதியில் காவல் துணை ஆணையர் அலுவலகம் நேற்றிரவு மழையின் போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவு, விடிந்தவுடன் நிலை என்ன என்பது பற்றிய காட்சிகளை பதிவிட்டு உள்ளனர். சென்னையை மீட்ட திமுக என்ற ஹேஷ்டேக்குடன் ரவுண்டு கட்டி அடித்து வருகின்றனர்.
சென்னைவாசிகள் பலரும் எடுத்த வீடியோக்கள் இந்த பதிவின் கீழ் கொடுக்கப்பட்டு உள்ளது.