ஒரே நாள்… 2 திரையுலக பிரபலங்கள் திடீர் மறைவு…! அதிர வைக்கும் காரணம்…!
சென்னை: திரைப்பட குணச்சித்திர நடிகர் பாண்டுவும், பாடகர் கோமகனும் கொரோனா தொற்றில் உயிரிழந்தது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திரையுலகில் குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் பாண்டு. இடிச்சபுளி செல்வராஜின் தம்பியான இவர் மிக சிறந்த ஓவியர். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று இருப்பது உறுதியானது.
இதையடுத்து சென்னை கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் இன்று நடிகர் பாண்டு காலமானார். அவருக்கு வயது 74.
சின்னத்தம்பி, ஏழையின் சிரிப்பில், காதல்கோட்டை என 100க்கான படங்களில் நடித்து தனி முத்திரை பதித்தவர். சிறந்த ஓவியரான இவர் தான் அதிமுகவின் கொடி மற்றும் சின்னத்தை வடிவமைத்தவர். மறைந்த பாண்டுவுக்கு 3 மகன்கள் உள்ளனர். அவரது மனைவி குமுதாவுக்கும் கொரோனா தொற்று இருப்பதால் அவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதே போன்று பாடகர் கோமகனும் கொரோனா தொற்றுக்கு பலியாகி இருக்கிறார். 2004ம் ஆண்டு சேரன் இயக்கி நடித்து திரையுலகில் தனி முத்திரை பதித்த ஆட்டோகிராப் படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பூக்களுமே என்ற பாடல் மூலம் புகழ் பெற்றவர்.
இந்த பாடலை எழுதிய பாடலாசிரியர் பா. விஜய், பாடகி சித்ரா ஆகியோருக்கு தேசிய விருது கிடைத்தது. மாற்றுத்திறனாளிகள் நல உறுப்பினராக இருந்த கோமகன், இசைப்பள்ளி ஒன்றையும் நடத்தி வந்துள்ளார். 2019ம் ஆண்டு கலைமாமணி விருது அவருக்கு வழங்கப்பட்டது. ஒரே நாளில் திரையுலகின் 2 பிரபலங்கள் அடுத்தடுத்து மறைந்து போனது, திரையுலகில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
அண்மையில் தான் நடிகர் விவேக், இயக்குநர் கேவி ஆனந்த் ஆகியோர் கொரோனா தொற்றுக்கு பலியான நிலையில் மேலும் 2 பிரபலங்கள் மறைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.