#Vijayakanth 72 துப்பாக்கி குண்டுகள்.. விடைபெறும் காவியத்தலைவன்
மறைந்த விஜயகாந்த் உடலுக்கு 72 துப்பாக்கி குண்டுகளுடன் அரசு மரியாதை செலுத்தப்படுகிறது.
நேற்றைய தினம் காலை 6.10 மணியளவில் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் காலமானார். அவரின் இழப்பு பெரும் அதிர்ச்சி அளிக்க, தீவுத்திடலில் வைக்கப்பட்டு உள்ள உடலுக்கு லட்சக்கணக்கானோர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி அன்பை காட்டினர்.
தமிழக அரசு அதிகாரிகள், மாநகராட்சி அலுவலர்கள், காவல்துறை என வேண்டிய ஏற்பாடுகளுடன் பலரும் அஞ்சலி செலுத்தினர். ஒட்டுமொத்த திரையுலகமே திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தது.
விஜயகாந்துக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்படும் என்று தமிழக அரசு நேற்று அறிவித்தது. இந் நிலையில் அவருக்கு அறிவித்தப்படி 72 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க மரியாதை அளிக்கப்படுகிறது.
அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலக வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. மக்கள் திரளை கட்டுப்படுத்த முடியாது என்பதால் உறவினர்கள், தொண்டர்கள் உள்ளிட்ட 200 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
தமிழக அரசின் சார்பில் அமைச்சர் மா சுப்பிரமணியன், தா மோ அன்பரசன் ஆகியோர் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்துகின்றனர் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.