தமிழக அரசின் கட்டுப்பாட்டில் வருகிறதா பிஎஸ்பிபி பள்ளி…?
சென்னை: பாலியல் புகார் பிரச்னையில் சிக்கி இருக்கும் பிஎஸ்பிபி பள்ளியை மாநில அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வர ஆலோசித்து வருவதாக பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
ஒரு ஆசிரியர் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு சமீபத்திய உதாரணம் பிஎஸ்பிபி பள்ளி வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன். 5 ஆண்டுகளாக மாணவிகளிடம் பாலியல் தொல்லை கொடுத்த விவரமும் வெளியாகி, காவல்துறை விசாரணைக்கு பின்னர் இப்போது அவர் சிறையில் இருக்கிறார்.
மறுபக்கம் பள்ளியின் முக்கிய நிர்வாகிகளிடம் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஆசிரியரே மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு செய்த விவகாரத்தை தொடர்ந்து பள்ளி மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்ற கருத்துகள் பரவலாக முன் வைக்கப்படுகிறது. இந்த பள்ளியை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன.
இந் நிலையில் பிஎஸ்பிபி பள்ளியை மாநில அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வர ஆலோசித்து வருவதாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:
மக்களின் கோரிக்கைகளின்படி, பள்ளி நிர்வாகம் சரியாக செயல்பட முடியாத காரணத்தால் அரசே பள்ளியை ஏற்று நடத்தலாம் என்ற முடிவில் இருக்கிறது. இது சிபிஎஸ்இ பள்ளி, எனவே மத்திய அரசிடம் அனுமதி கேட்போம், அதன் பின்னர் பள்ளியை எடுத்து நடத்துவோம் என்று கூறி உள்ளார்.
மத்திய அரசு இதை அனுமதிக்குமா என்பது தெரியவில்லை. ஆனால் தமிழக அரசு எப்படியாவது முயற்சி எடுக்கும். மாணவிகளின் நலன்கருதி பள்ளியை தமிழக அரசு கட்டுப்பாட்டில் எடுக்கும் என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.