சீமான்… உனக்கே இது நல்லாயிருக்கா..? உரிச்சுவிட்ட நெட்டிசன்ஸ்
சீமான் அளித்த ஒரு பேட்டி தான் இப்போது நாம் தமிழர் தம்பிகளையும், அதன் ஆதரவாளர்களையும் கொந்தளிக்க வைத்து இருக்கிறது.
தமிழ் என்று மேடையில் முழங்குவார், தமிழே என் உயிர் மூச்சு என்பார், தமிழில் தான் எங்கும் பேசுவார்…! இதுதான் நாம் தமிழர் சீமானின் ஸ்டைல். அவரின் இந்த ஸ்டைல் ஒரேயொரு பேட்டியில் தவிடுபொடியாகி இருக்கிறது.
மேடைக்கு மேடை தமிழ் எங்கு ஆர்ப்பரிக்கும் அவரின் கட்சியில் விருதுநகர் எம்பி தொகுதி வேட்பாளர் கவுசிக் பாண்டியனுக்கு தமிழ் தெரியாது. வேட்பு மனு தாக்கலின் போது அவர் திணறி, திணறி முழித்தது ஊடகங்களில் வீடியோவாக வெளியானது. பெரும் பேசு பொருளாகவும் மாறியது.
இது குறித்து சீமான் பேட்டி ஒன்றில் சில கருத்துகளை தெரிவித்தார். அதில், ஓமனில் படித்த எனது வேட்பாளர் கவுசிக் பாண்டியனுக்கு தமிழ் தெரியவில்லை என்பது எனக்கு அவமானம் இல்லை. வீழ்வது நாமாகினும், வாழ்வது தமிழாகட்டும் என்ற வெற்று முழக்கத்தை வைத்து எங்களை வீழ வைத்தவர்கள் தான் அவமானப்பட வேண்டும்.
எனது மகன்கள் இருவரும் (அவரின் மகன் ஒருவரே. அவர் பெயர் மாவீரன் பிரபாகரன், மற்றொருவர் ஆகில்யன். இவர் சீமானின் மனைவி கயல்விழியின் சகோதரி மகன். சகோதரி காலமாகிவிட்டதால் அவரது பிள்ளையை வளர்ப்பு மகனாக வளர்த்து வருகிறார். இருவரையும் சீமான் தமது மகன்கள் என்றே குறிப்பிடுவது வழக்கம்) ஆங்கில வழிக்கல்வியில் படிக்கின்றனர்.
மகன்கள் ஆங்கிலத்தில் படிப்பது எனக்கு அவமானம். எனது மகன்கள் தமிழகத்தில் படிக்க இங்கு பள்ளிகள் இல்லை என்று பேசி இருக்கிறார்.
சீமானின் இந்த பேட்டி தான்… இப்போது பூமராங் ஆக மாறி திருப்பி அடிக்க ஆரம்பித்து இருக்கிறது. ஊர் முழுக்க தமிழ், தமிழ் என்று கழுத்து நரம்பு புடைக்க பேசிவிட்டு, தம் பிள்ளைகளை ஆங்கில வழிக்கல்வியில், ஆங்கில பள்ளியில் படிக்க வைப்பது என்ன நியாயம் என்று கேள்வி கேட்டு வெடிக்க ஆரம்பித்து உள்ளனர்.
தகவலுக்காக; சீமானின் பிள்ளைகள் இருவரும் படிக்கும் பள்ளியின் பெயர் அமெரிக்கன் இன்டர்நேஷனல். இங்கு ஆண்டுக்கான கல்விக்கட்டணம் 25 லட்சம் ரூபாயாம். இது உண்மையா? இல்லையா? என்பதை சீமான் தான் விளக்க வேண்டும். கழுத்து நரம்பு புடைக்க இதை மறுப்பாரா? மறுக்க வேண்டும் என்பதே சீமான் தம்பிகளின் விருப்பமாக உள்ளது.