பிரபல நடிகருக்கு 'திடீர்' மூச்சுத்திணறல்…! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை #DilipKumar
மும்பை: பிரபல பாலிவுட் நடிகரான திலீப்குமாருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.
இந்தி திரையுலகின் பழம்பெரும் நடிகர் திலீப்குமார். தேவதாஸ், அந்தாஸ், ராம் அவுர் ஷியாம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். இந்தி திரையுலகின் உச்ச நட்சத்திரமாக விளங்கிய இவர், மும்பையில் பாந்த்ரா பகுதியில் வசிக்கிறார்.
98 வயதாகும் திலீப்குமாருக்கு அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்படுகிறது. நள்ளிரவு திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட உடனடியாக மும்பையில் உள்ள இந்துஜா மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டு உள்ளார்.
அவருக்கு மூச்சுத்திணறல் உள்ளதால் ஐசியுவில் சேர்க்கப்பட்டு உள்ளார். அவரது உடல்நிலைய கண்காணித்து வருவதாகவும், தற்போது சீராக உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறி உள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பாக இதே பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் குணம் அடைந்து வீடு திரும்பினார்.
பாலிவுட் நடிகரான திலீப்குமார், 1944ல் நடிகராக கால் பதித்தார். 50 ஆண்டுகளில் ஏராளமான படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தவர். கடைசியாக 1998ல் அவர் நடித்தார்.
1994ம் ஆண்டில் தாதாசாகேப் பால்கே விருது வென்றவர். பத்மபூஷன், பத்ம விபூஷன் விருதுகளும் திலீப்குமாருக்கு வழங்கப்பட்டு உள்ளன. சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதுகளை அதிக முறை வென்றிருக்கிறார். திலீப்குமார் மருத்துவமனையில் இருப்பதால் #DilipKumar என்ற ஹேஷ்டேக் இணையத்தில் பிரபலமாகி வருகிறது.