ஒன்றல்ல, இரண்டல்ல…3 மணி நேரம் பேட்டி…! ரகசியம் உடைக்கும் சசிகலா…!
சென்னை: பிரபல செய்தி தொலைக்காட்சி ஒன்றில் சசிகலா 3 மணி நேரம் பேட்டி அளித்து உள்ளார் என்றும் விரைவில் அது ஒளிப்பரப்பாக இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
சொத்து குவிப்பு வழக்கு, சிறை தண்டனை, கொரோனா, தமிழகம் ரிட்டர்ன், ஆன்மீகம் என்று தமிழகத்தையே பரபரக்க வைத்த சசிகலா இப்போது ஆடியோ அரசியலில் இருக்கிறார். தொண்டர்களிடம் அவர் பேசும் ஆடியோ அரசியல், மற்ற கட்சிகளை விட அதிமுகவை அதிரி, புதிரியாக்கி இருக்கிறது.
விரைவில் ஜெயலலிதா நினைவிடம் செல்ல உள்ளார் என்று தொடர்ந்து செய்திகள் கசிந்த வண்ணம் உள்ளன. ஆனால் அவர் எப்போது செல்கிறார் என்று உறுதியாக தகவல்கள் இல்லை. அதற்கான காரணங்களும் இருக்கின்றன.
வரும் 23ம் தேதி ஜெயலலிதா நினைவிடம் பயணம் என்று ஒரு தகவல் உலாவி கொண்டிருக்கிறது. ஆனால் அது உண்மை இல்லை என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் ஜெயலலிதா நினைவிடம் போகும் போது கூட்டம் மாஸாக இருக்க வேண்டும் .. தற்போது கொரோனா ஊரடங்கு நடைமுறையில் இப்போது வேண்டாம் என்று நினைவிட பயணத்தை சசிகலா தள்ளி போட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
நினைவிடம்… பின்னர் மாவட்ட அளவில் சுற்றுப்பயணம் என்று திட்டமிடல் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இப்போது அனைத்தையும் தூக்கி சாப்பிடும அளவுக்கு ஒரு செய்தி உலாவி வருகிறது.
அதாவது… பிரபல தொலைக்காட்சியான ஜெயாவில் சசிகலாவின் நெடிய பேட்டி ஒன்று ரெக்கார்டு ஆகியிருக்கிறதாம். ஒன்றல்ல… இரண்டல்ல, 3 மணி நேரம் சசிகலா பேட்டி கொடுத்திருக்கிறார். பிரபல செய்தியாளர் ஒருவர் இந்த பேட்டியை எடுத்துள்ளார்.
ஒரே நாளில் அனைத்து வித எபிசோட்களும் ஒளிப்பரப்பாமல் பகுதி, பகுதியாக விரைவில் ஜெயா தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாக உள்ளதாக தெரிகிறது. பேட்டியில் கூறப்பட்டு உள்ள விஷயங்கள் என்ன என்பது குறித்து அறிய மற்ற கட்சிகளை விட அதிமுக ஆவலுடன் இருக்கிறதாம்.
அந்த பேட்டியில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை, அன்றைய காலக்கட்டத்தில் என்ன நடந்தது, அதிமுகவில் தமது உரிமை, எடப்பாடி பழனிசாமி எப்படி முதல்வரானார்?
அப்போது நடந்த அரசியல் நிகழ்வுகள், ஓபிஎஸ் அரசியல், அவரது தர்மயுத்தம் என அனைத்து விஷயங்கள் வெளிவர உள்ளதாம். ஒட்டு மொத்த அரசியல் ரகசியங்கள் இந்த பேட்டியில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இதய தெய்வம் மாளிகை கிலியில் உள்ளதாக தகவல்கள் கூறப்படுகிறது. மற்ற அரசியல் கட்சிகளும் பேட்டியில் என்ன சொல்லப்பட்டு இருக்கும் என்று தமது சோர்ஸ்கள் மூலம் விசாரிக்க ஆரம்பித்துள்ளன… விரைவில் அனைத்தும் வெளிவரும் என்று தெரிகிறது…!