சென்னையில் பாஜகவுக்கு 2வது கவுன்சிலர்…! அறிவாலயம் அதிர்ச்சி
சென்னை: சென்னையில் பாஜகவுக்கு 2வது கவுன்சிலர் கிடைத்துள்ளார்.
தமிழகத்தில் தலைநகர் சென்னை என்பது திமுகவின் கோட்டை என்று வர்ணிக்கப்படுகிறது. கட்சியின் வீச்சு அப்படி என்று உடன்பிறப்புகள் இன்றும் மார் தட்டிக் கொண்டு வருகின்றனர்.
ஆனால் இப்போது திமுகவுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக அக்கட்சியில் வெற்றி பெற்ற 198வது வார்டு கவுன்சிலர் லியோ சுந்தரம் பாஜகவில் இணைந்துள்ளார். அதிமுகவில் இருந்த அவர் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதன் பின்னர் அவர் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்து கொண்டார். ஆனால் இப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் திமுகவில் இருந்து ஜம்ப்பாகி பாஜகவுக்கு சென்றுள்ளார்.
நேற்று அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் தம்மை பாஜகவில் அதிகாரப்பூர்வமாக இணைத்து கொண்டார். இதன் மூலம் சென்னையில் பாஜகவுக்கு 2வது கவுன்சிலர் கிடைத்துள்ளார்.
இதற்கு முன் 134வது வார்டில் பாஜகவின் உமா ஆனந்தன் வெற்றி பெற்று கவுன்சிலராக இருக்கிறார். தற்போது லியோ சுந்தரத்தின் வருகையில் பாஜகவுக்கு 2 கவுன்சிலர்கள் சென்னை மாநகராட்சிக்கு கிடைத்துள்ளனர்.
இதை சுட்டிக்காட்டும் பாஜகவினர், இது தொடக்கம் தான்.. அடுத்த வரக்கூடிய காலக்கட்டங்களில் மேலும் பலரை எதிர்பார்க்கலாம் என்று கண் சிமிட்டுகின்றனர். தலைநகர் சென்னையில் ஆளும் திமுக வலுவாக உள்ள நிலையில் கவுன்சிலர் ஒருவர் எப்படி பாஜகவுக்கு தாவினார் என்பதை அறியாததால் அறிவாலயம் திகைப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான ரியாக்ஷன் இருக்கும் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.