அதிமுகவில் குழப்பமா..? அமைச்சர்கள் உடன் இபிஎஸ், ஓபிஎஸ் மாறி, மாறி ஆலோசனை
சென்னை: சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சந்தித்தார்.
அதிமுக செயற்குழு கூட்டம் முடிந்து 24 மணி நேரம் கூட ஆகவில்லை. அதற்குள்ளாக அதிமுகவில் காலை முதலே பரபரப்புக்கு பஞ்சமில்லாத காட்சிகள் நடந்து வருகின்றன. யார் முதலமைச்சர் வேட்பாளர் என்று வரும் 7ம் தேதியில் அக்கட்சியின் சார்பில் அறிவிக்கப்படும்.
இதில் இபிஎஸ் தான் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இந் நிலையில் இன்று காலையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை எம்பி வைத்திலிங்கம், கே.பி. முனுசாமி உள்ளிட்ட பலர் சந்தித்தனர். கட்சியில் நேற்று முதல் எழுந்துள்ள விவகாரம் குறித்து அவர்கள் பேசியதாக தெரிகிறது.
கட்சிக்குள் எந்த குழப்பமும் இல்லை எனவும், அதிமுக தான் மீண்டும் ஆட்சியமைக்கும் என ஓபிஎஸ்வுடனான ஆலோசனைக்கு பிறகு துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் கூறினார். ஓபிஎஸ், இபிஸ் இருவருக்கும் எனது ஆதரவு உண்டு என அவர் தெரிவித்து உள்ளார்.
அதை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்தை முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சந்தித்தார். கடந்த ஆண்டு அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டவர் மணிகண்டன். அவர் தற்போது ராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.
காலையில் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தியிருந்தார். இப்போது மாலையில் இபிஎஸ் ஆலோசனை நடத்தியுள்ளார். மாறி, மாறி நடக்கும் இந்த சந்திப்புகளால் அதிமுக முகாம் பரபரப்பில் உள்ளது.