திருமாவளவனை 'அவமானப்படுத்திய' திமுக அமைச்சர்…! குமுறும் சிறுத்தைகள்
சென்னை: விசிக தலைவர் திருமாவளவனை அமைச்சர் ராஜ கண்ணப்பன் அவமானப்படுத்திய நிகழ்வு பெரும் சர்ச்சையாகி இருக்கிறது.
தமிழக அரசியலில் குறிப்பிடத்தக்க செல்வாக்கு பெற்ற அரசியல் தலைவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன். பட்டியலின மக்களின் உரிமைகளுக்காக போராடி வரும் அவரை மாற்று சமுதாய மக்களும், அரசியல் கட்சியினர் பல தருணங்களில் பாராட்டிய சம்பவங்கள் உண்டு.
ஆனால்.. தாம் கூட்டணி வகிக்கும் திமுகவில் உள்ள ஒரு முக்கிய அமைச்சரே திருமாவளவனை அவமானப்படுத்திய செயல் இப்போது பெரும் சர்ச்சையாகி இருக்கிறது. அனைத்தையும் ஒரேயொரு போட்டோ வெளிச்சம் போட்டு காட்டி உள்ளது.
அதாவது… போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனை திருமாவளவன் நேரில் சென்று சந்தித்துள்ளார். அதுவும் அவரது பிறந்த தினத்தில் வாழ்த்து தெரிவிக்க திருமாவளவன் சென்றார் என்று கூறப்படுகிறது.
அப்போது தான் இந்த அவமானப்படுத்தும் நிகழ்வு அரங்கேறி இருக்கிறது. அமைச்சர் ராஜ கண்ணப்பன் படு பயங்கர பந்தாவுடன் ராஜ கம்பீரமாக சொகுசான சோபாவில் உட்கார்ந்திருக்கிறார். அவருக்கு அருகில் திருமாவளவன் ஒரு சாயம் போன அழுக்கடைந்து பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்து இருக்கிறார்.
இத்தனைக்கு ராஜ கண்ணப்பனுக்கு அருகில் அவர் அமர்ந்திருப்பதை போன்று ஒரு சொகுசு சோபா இருக்கிறது. அதில் திருமாவளவனை அமர வைக்கவில்லை. மாறாக, வேண்டும் என்றே உள்ளே இருந்து எங்கோ கிடந்த ஒரு அதர, பழசான சாயம் போன அழுக்கடைந்த பிளாஸ்டிக் நாற்காலியை இவருக்காகவே எடுத்து வந்து போட்டு திருமாவளவனை ராஜ கண்ணப்பன் அமர வைத்திருக்கிறார்.
சொகுசு சோபாவில் ராஜ கண்ணப்பன், பிளாஸ்டிக் நாற்காலியில் திருமாவளவன் என இந்த சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது. இப்படி அவமானப்படுத்தி இருக்கிறார் ராஜ கண்ணப்பன் என்று சர்ச்சை வெடித்து உள்ளது.
ஆனால் இந்த போட்டோவை பார்க்கும் திமுகவினர் அனைத்தும் பொய் என்கிற ரீதியில் மறுத்து வருகின்றனர். அவர்களுக்கு பதிலடி தரும் வகையில் பல்வேறு அரசியல் பிரபலங்கள், முக்கிய அதிகாரிகள் உள்ளிட்டோர் சமூக வலைதளங்களில் இந்த போட்டோவை பகிர்ந்திருக்கின்றனர்.
பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வந்திருக்கும் ஒரு கட்சியின் தலைவரை, ஒரு சமுதாயத்தின் பிரதிநிதியை இப்படியா மரியாதை இல்லாமல் நடத்துவது? சமூக நீதியை வாய்கிழிய பேசும் திராவிட கட்சிகளில் ஏன் இந்த பிரிவினை என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
யாருடன் எப்போது சந்தித்தாலும் அது தொடர்பான போட்டோ மற்றும் செய்தியை திருமாவளவன் தமது சமூக வலைதளத்தில் பகிர்வது வழக்கம். இந்த பிளாஸ்டிக் நாற்காலி போட்டோ மட்டும் ஏன் பகிரவில்லை என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. மேலும், இப்படிப்பட்ட சம்பவத்தை அறிந்த விசிகவினர் கடும் கொதிப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. அனைத்தையும் கூட்டி, கழித்து பார்த்து நெட்டிசன்களும் ‘நாற்காலி’ போட்டோவை இணையத்தில் உலவ விட்டு உள்ளனர்.