உதயநிதிக்கு ஏன் அமைச்சர் பதவி இல்லை…? பின்னணி இதுதான்…!
சென்னை: அமைச்சரவையில் உதயநிதிக்கு ஏன் இடம் தரவில்லை என்பது குறித்து திமுக முகாமில் பரபரப்பு காரணங்கள் சொல்லப்படுகின்றன.
நாளை தமிழகத்தின் புதிய முதலமைச்சராக முதல் முறையாக பொறுப்பேற்கிறார் ஸ்டாலின். தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்களும், கூட்டணி கட்சியினரும் படு உற்சாகத்தில் இருக்கும் அதே வேளையில் அமைச்சரவை பட்டியலும் வெளியாகி பட்டையை கிளப்பி இருக்கிறது.
ஸ்டாலினுடன் சேர்த்து மொத்தம் 34 பேர் கொண்ட அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது. அமைச்சர்கள் யார், யார் என்பது பற்றிய பேச்சுகள் ஒரு பக்கம் இருந்தாலும், யாருக்கு எல்லாம் அமைச்சர் பதவி தரப்படவில்லை என்ற பேச்சு ஒரு பக்கம் ஒடிக் கொண்டிருக்கிறது.
அதில் முதலாவது பட்டியலில் இருப்பவர் சாட்சாத் ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின். எதாவது ஒரு துறைக்கு இம்முறை அவர் அமைச்சராகிவிடுவார் என்று அவரது ஆதரவாளர்களும், திமுக அபிமானிகளும் எதிர்பார்த்தனர். ஆனால் அது நடக்காமல் போயிருக்கிறது. அதற்கான காரணங்களும் திமுக முகாமில் இருந்து வெளியாகி இருக்கின்றன.
உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் ஏற்கனவே திமுகவில் இன்னமும் குற்றச்சாட்டுக்கு ஆளாகி வரும் வாரிசு அரசியல் என்று புகார் எழும் என்பதால் தவிர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது எம்எல்ஏ என்ற நிலையில் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், முக்கிய பிரமுகர்களை சந்தித்து உதயநிதி ஸ்டாலின் ஆசி பெற்று வருகிறார்.
மேலும், இப்போது தான் முதல்முறையாக எம்எல்ஏவாக தேர்வாகி இருக்கிறார். ஆகவே முதல் முயற்சியிலேயே அவருக்கு அமைச்சர் பதவி தர வேண்டாம். ஒரு எம்எல்ஏவாக மக்கள் பிரதிநிதியாக தம்மை நிரூபித்து காட்டிய பின்னர், அனைவரின் முழு ஒப்புதலுடன் அமைச்சர் பதவி அளிக்கலாம், இப்போது வேண்டாம் என்று முடிவெடுக்கப்பட்டு இருக்கிறதாம். உதயநிதி ஸ்டாலினின் ஆதரவாளர்களுக்கும் இந்த விஷயம் சொல்லப்பட்டு உள்ளதாம்.
எனவே, வாரிசு அரசியல் சர்ச்சைக்கு நாமே இடம்கொடுத்த மாதிரி ஆகிவிடும் என்பதால் ஸ்டாலின் பிடிவாதமாக மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. எந்த சந்தர்ப்பத்திலும் குடும்ப அரசியல் என்ற வட்டத்துக்குள் இப்போது சிக்கிக் கொள்ள வேண்டாம் என்று ஸ்டாலின் நினைப்பதும் ஒரு காரணமாம். ஆனால் இது இப்படியே இருக்காது.. சிறிதுகாலம் கழித்து உதயநிதியின் பர்மான்ஸ் கண்டு அமைச்சரவையில் சேர்க்கப்படலாம் என்றும் ஒரு தகவல் றெக்கை கட்டி பறக்கிறது.