ஒரு தொகுதிதான்… அண்ணன் திமுக.. தம்பி அதிமுக…! வேட்பாளர் தேர்வில் சுவாரசியம்
சென்னை; அண்ணனுக்கு திமுகவில், தம்பிக்கு அதிமுகவிலும் சீட் கிடைக்க யாருக்கு வெற்றி கிடைக்கும் என்று ஆண்டிப்பட்டி தொகுதி மக்கள் காத்திருக்கின்றனர்.
சட்டசபை தேர்தலுக்கு தயாராகி வரும் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு தயாராகிவிட்டன. மற்ற தொகுதிகளை விட ஆண்டிப்பட்டி தொகுதி வேட்பாளர்கள் பற்றி திமுக, அதிமுகவின் அறிவிப்பு அதீத கவனம் பெற்றுள்ளது.
தேனி மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி சட்டசபை தொகுதி, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோர் போட்டியிட்டு வென்ற தொகுதி. 2016ம் ஆண்டு பொதுத் தேர்தலில் அதிமுகவின் தங்க தமிழ்ச்செல்வன் வென்றார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சசிகலா பக்கம் அவர் சென்றதால், தகுதி நீக்கம் செய்யப்பட்டு அவரது பதவி பறிக்கப்பட்டது.
பின்னர் நடைபெற்ற இடைத் தேர்தலில் அதிமுகவின் ஆண்டிபட்டி ஒன்றியச் செயலாளர் லோகிராஜன் வேட்பாளராக அறிவிக்கப்பட்பட்டார். அவரை எதிர்த்து உடன் பிறந்த அண்ணன் மகாராஜன் திமுக வேட்பாளராக களம் இறங்கினார்.
நேரதிர் கட்சிகளில் சகோதரர்கள் நேருக்கு நேர் மோதியதில் ஆண்டிப்பட்டி தொகுதி அனைவரின் பார்வைக்கு சென்றது. அந்த தேர்தலில் 20 ஆண்டுகள் கழித்து, ஆண்டிப்பட்டி தொகுதியை திமுக கைப்பற்றியது.
இந் நிலையில், வரும் 6ம் தேதி நடைபெறும் சட்டசபை தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் அதிமுக சார்பில் லோகிராஜன் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ மகாராஜன் மீண்டும் போட்டியிடுகிறார். ஆகையால், மீண்டும் இந்த தொகுதியில் அண்ணன் தம்பிகள் மோதிக் கொள்வதால் ஆண்டிப்பட்டி தொகுதி அதிக கவனம் பெற்றுள்ளது.