இதான் ரிப்பீட்டு…! 5G ஏலம்.. வாயை திறந்த ஆ.ராசா
டெல்லி: 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் ஊழல் நடந்துள்ளது என்றும் இந்த அரசு தூக்கி எறியப்பட்டவுடன் அடுத்த அரசு இதை விசாரிக்கும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்பியுமான ஆ ராசா கூறி இருக்கிறார்.
ஸ்பெக்ட்ரம்… இந்த வார்த்தையை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது. நாடு முழுவதும் 2 ஜி ஏலம், அதில் ஊழல் என்று எதிர்க்கட்சிகள் கூப்பாடு போட்டு, நாடாளுமன்றத்தை அமளி துமளியாக்கின.
இப்போது ரிப்பீட்டாக 5 ஜி அலைக்கற்றை ஏலம் தொடர்பாக எழுந்துள்ள பேச்சுகள் பாஜகவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு 2ஜி ஏலத்தில் 1.76 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு என்று குற்றச்சாட்டின் அடிப்படையில் ஆ ராசா, கனிமொழி உள்ளிட்டோர் சிறைக்கு அனுப்பப்பட்டனர். திமுகவுக்கு இந்த விவகாரம் பெரும் நெருக்கடியை தந்தது.
ஆனால், காலங்கள் மாறும், காட்சிகள் மாறும் என்பது எவ்வளவு நிதர்சனமான உண்மை என்பது போல 5ஜி அலைக்கற்றை ஏலம் பற்றிய விவரங்கள் வெளிவர தொடங்கி உள்ளன.
எதிர்பார்க்கப்பட்டதை விட 5ஜி ஏலம் 2.80 லட்சம் கோடி ரூபாய் குறைவாக ஏலம் போயுள்ளது. அதை ஏன் இப்போது ஊழல் என்று பேச மறுக்கிறார்கள் என சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
இதே விவகாரத்தை முன் வைத்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா சில கருத்துகளை வெளியிட்டு உள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
2g அலைக்கற்றையை டிராய் அமைப்பின் பரிந்துரைப்படி நான் கொடுத்த போது 1.76 லட்சம் கோடி ரூபாய் நட்டம் என்று சிஏஜி கூறியது. ஆனால் இப்போது 51 மெகாஹெர்ட்ஸ் 2gயில் பேச மட்டுமே முடியும்.
5ஜியில் இணைய வேகம் பலமடங்கு இருந்தாலும் கூட குறைந்தது 5 லட்சம் கோடி ரூபாய் 6 லட்சம் கோடி ரூபாய் வரை ஏலம் போயிருக்க வேண்டும். ஆனால் குறைந்த ஏலத்தில் தான் போயிருக்கிறது. மத்திய அரசின் தோல்வியா? நிறுவனங்களுடன் செய்து கொண்ட கூட்டு சதியா என்று விசாரிக்க வேண்டும்.
இதில் மிக பெரிய ஊழல் நடந்திருக்கிறது. இந்த அரசு விசாரிக்க வேண்டும், இல்லை என்றால் இந்த அரசு அகற்றப்பட்டவுடன் அடுத்த வரும் அரசு இதை விசாரிக்கும் என்று கூறினார்.