அதிமுகவில் ஆரம்பித்த ‘டிஷ்யூம்’… ‘டிஷ்யூம்’…! ஒத்த தலைமை தான் வேணும்…!
சென்னை: ஒத்த தலைமை தான் வேண்டும் என்று ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் முழக்கம் எழுப்ப பரபரப்பான சூழல் எழுந்தது.
தமிழக சட்டசபை தேர்தல் முடிந்துவிட்டது. அதிமுக கூட்டணி 75 இடங்களில் மட்டுமே வெல்ல, திமுக கூட்டணி அறுதி பெரும்பான்மையோடு ஆட்சியை பிடித்திருக்கிறது. முதலமைச்சராக ஸ்டாலின் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
முதலமைச்சர் பதவி ஏற்ற அடுத்த நிமிடம் முதல் ஸ்டாலின் பரபரப்பாக இயங்க… அதிமுக முகாமின் நிலையோ தலைகீழானது. இங்கே முதலமைச்சர் ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுடான ஆலோசனை நடத்திக் கொண்டு இருக்கே… அதிமுக தலைமையகத்தில் அக்கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற ஆரம்பித்தது.
இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் யார் என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது. பின்னர் தேர்தலில் தோல்வி ஏற்பட்டது ஏன் என்று பேசி தீர்வு காண வேண்டும். ஆகையால் அதிமுக எம்எல்ஏக்கள் வந்தனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த விஜயபாஸ்கர் கூட்டத்துக்கு வரவில்லை.
கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே கட்சி தொண்டர்கள் இடையே வாக்குவாதம் எழுந்தது. எதிர்க்கட்சி தலைவர் யார்? கட்சிக்குள் ஒத்த தலைமை தான் வேண்டும் என்று ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் ஆவேச முழக்கம் எழுப்பியதால் கட்சி தலைமை அலுவலகத்தில் திடீர் சலசலப்பு எழுந்தது.