யார் முதலமைச்சர்..? இபிஎஸ், ஓபிஎஸ் வாக்குவாதம்…! அதிமுக செயற்குழுவில் பரபரப்பு
சென்னை: முதலமைச்சராக்கியது யார் என்று இபிஎஸ், ஓபிஎஸ் இடையே அதிமுக செயற்குழுவில் கடும் விவாதம் எழுந்ததாக கூறப்படுகிறது.
கடும் உட்கட்சி குழப்பம், இபிஎஸ், ஓபிஎஸ் பனிப்போர் இடையே, அதிமுக செயற்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டாலும் அதையும் தாண்டி காரசாரமான விவாதங்கள் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அமைத்த பின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்யலாம் என்று ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூறியதாக தெரிகிறது. ஆனால் அதை இபிஎஸ் தரப்பு ஏற்க மறுக்க, விவாதம் காரசாரமாக மாறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு கட்டத்தில் யார், யாரால் முதலமைச்சர் ஆனார்கள் என்று விவாதம் நீண்டது. என்னை முதல்வர் ஆக்கியது அம்மா( ஜெயலலிதா). நான் இப்போது இந்த ஆட்சிக்கு மட்டும் தான் துணை முதலமைச்சர், உங்களை(இபிஎஸ்) முதலமைச்சராக்கியது சசிகலா என்று வெடித்ததாக தெரிகிறது.
ஆனால், அதற்கு பதிலடியாக இருவரையும் முதலமைச்சர் ஆக்கியது சசிகலா தான் இபிஎஸ் கூறியதாக கூறப்படுகிறது. கொரோனா காலத்திலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறேன், முதலமைச்சராக நான் சிறப்பாக இயங்கவில்லையா? பிரதமர் மோடியே எனது ஆட்சியை பாராட்டி உள்ளார் என்று பதிலுக்கு பேசியிருப்பதாக தெரிகிறது.
இருவரிடையே நடைபெற்ற இந்த வாத, விவாதங்கள் கட்சியின் உண்மையான ரத்தத்தின் ரத்தங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர்களில் யார் ஒருவர் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டாலும் கோஷ்டி பூசல் இன்னும் உச்சக்கட்டத்துக்கு போகுமே என்று கவலையில் ஆழ்ந்திருக்கின்றனர்.