பிரதமர் மோடி நியமித்த மத்திய அமைச்சர் வங்கதேசத்தை சேர்ந்தவரா..?
டெல்லி: பிரதமர் மோடி நியமித்த மத்திய உள்துறை இணையமைச்சர் நிஷித் ப்ரமாணிக் வங்கதேசத்தை சேர்ந்தவர் என்ற தகவலை எதிர்க்கட்சிகள் பூதாகரமாக்கி வருகின்றன.
2வது முறையாக பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் மோடி முதல் முறையாக அண்மையில் மத்திய அமைச்சரவையை விரிவாக்கம் செய்தார். மொத்தம் 43 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
மத்திய அமைச்சரவை விரிவாக்கம் குறித்து எதிர்க்கட்சிகள் இப்போது ஒரு பிரச்னையை கொண்டு வந்திருக்கின்றன. அதாவது மத்திய உள்துறை இணையமைச்சராக பதவியேற்ற நிஷித் ப்ரமாணிக் வங்கதேசத்தை சேர்ந்தவர், அவர் இந்தியர் அல்ல… எங்கே உங்களின் தேசப்பற்று என்று போட்டு தாக்கி வருகின்றன.
இணையத்தில் அவர் வங்கதேசத்தை சேர்ந்தவர் என்று வெளியாக ஊடகங்களும் அதை மேலும் பெரிதாக்கி இருக்கின்றன. குறிப்பாக காங்கிரஸ் இதை ஒரு விவாத பொருளாக மாற்றி இருக்கிறது.
இது குறித்து அக்கட்சியின் ராஜ்யசபா எம்பி ரிபுன் போரா, பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் ஒன்றையே எழுதி இருக்கிறார். அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டு உள்ளதாவது:
ஊடகங்களில் குறிப்பிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் நிஷித் ப்ரமாணிக் வங்கதேசத்தை சேர்ந்தவர். அந்நாட்டின் காய்பாந்தா மாவட்டம் ஹரிநாத்பூர் என்ற ஊரில் பிறந்தவர். கணினி பாடப்பிரிவில் பட்டம் பெற மேற்கு வங்கம் அவர் பட்டம் பெற்று மம்தான பானர்ஜியின் திரிணமுல் காங்கிரசில் சேர்ந்திருக்கிறார்.
அதன் பின்னர் பாஜகவில் ஐக்கியமாகி, கூச் பிகார் தொகுதி எம்பியாக தேர்வாகி இருக்கிறார். வேட்பு மனு உள்ளிட்ட தேர்தல் ஆவணங்களில் முகவரியை முறைகேடு செய்துள்ளார். அவர் அமைச்சரானவுடன் உடன்பிறந்த சகோதரர் உள்ளிட்ட பலர், அவரது பூர்வீக கிராமத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேறு ஒருநாட்டவர் நாட்டின் மத்திய உள்துறை இணையமைச்சராக பொறுப்பேற்று இருக்கிறார் என்றால் அது சாதாரண விஷயமல்ல. இந்த விஷயம் குறித்து மத்திய அரசு உரிய விசாரணை நடத்தி அனைத்து தரப்பினரின் சந்தேகத்தை போக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.
நிலைமை இப்படியிருக்க, நிஷித் ப்ரமாணிக் வங்கதேச அகதி என்று கூறி இருக்கிறார் பாஜக பொது செயலாளர் சயந்தன் பாசு. வங்கதேசத்தில் இருந்து வந்த அகதி நிஷித் ப்ரமாணிக். குடியுரிமை திருத்த சட்டத்தின்படி வங்கதேச அகதிகளுக்கு குடியுரிமை அளிக்கப்படுகிறது. ஆனால் எதிர்க்கட்சிகள் இதை வேண்டும் என்று பிரச்னையாக்குகின்றன என்று பதிலடி தந்துள்ளார்.