தமிழகத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிப்பு..! எத்தனை நாட்கள் தெரியுமா..?
சென்னை: தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்துக்கு தளர்வுகள் அற்ற ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது. தினசரி பாதிப்பு என்பது 30 ஆயிரத்தை கடந்து அதிர்ச்சி அளிக்கிறது. மாவட்டங்கள் அளவில் கோவையில் தினசரி பாதிப்பு என்பது 5 ஆயிரத்தை எட்டி வருகிறது.
கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு முழு ஊரடங்கு வரும் 31ம் தேதி வரை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன் பின்னர் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்து வந்தது.
இந் நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. வரும் 7ம் தேதி வரை இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஜூன் மாதம் முதல் 13 வகையான மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மாவட்டங்களில் நடைமுறையில் உள்ள நடமாடும் வாகனங்களில் காய்கறி கடைகள்,பழங்கள் விற்பனை தொடரும். ஆன்லைனில், தொலைபேசியில் வாடிக்கையாளர்கள் கேட்கும் பொருட்கள் வீடுகளுக்கு சென்று வழங்கப்படும். அரசின் முயற்சிகளுக்கு அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.