ரஜினியை வைத்து பாஜக போடும் ‘மாஸ்டர்’ பிளான்…? டெல்லி தந்த மெசேஜ்…!
சென்னை: 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பிரதமர் மோடிக்கு பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று ரஜினிகாந்திடம் பாஜக கூறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரஜினிகாந்த் என்ன செய்தாலும் பரபரப்பு… அதுதான் அடுத்த 24 மணி நேரத்தில் நாடு முழுக்க பேசப்படும். இப்படித்தான் ஆளுநர் ரவியுடனான சந்திப்பு பற்றிய செய்திகள் வெளியாகி கொண்டே இருக்கின்றன. அதில் லேட்டஸ்ட்டாக பல தகவல்கள் பாஜக பக்கம் இருந்து கசிந்திருக்கின்றன.
ஆளுநர் ஆர்என் ரவி, ரஜினிகாந்த் சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தை உற்று நோக்க வைத்திருந்தாலும் இதற்கான முன் தயாரிப்பு என்பது டெல்லி பாஜக என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
அவர்கள் கூறிய விவரங்களை ஒதுக்கிவிட முடியாத அளவுக்கு என்பது தான் முக்கிய அம்சம். ஆகஸ்ட் 6ம் தேதி சென்னையில் இருந்து டெல்லிக்கு ரஜினிகாந்த் பயணம். பிரதமர் மோடி தலைமையில் சுதந்திர அமிர்த விழா கொண்டாட்டங்களுக்கான தேசிய கமிட்டி ஆலோசனை கூட்டம். இந்த கமிட்டியில் ரஜினிகாந்த் கலந்து கொண்டுவிட்டு, அடுத்த நாளே சென்னையில் ஆளுநரை சந்தித்து இருக்கிறார்.
காரணம்… டெல்லியில் பிரதமர் மோடி ரஜினியை சந்தித்து பேசி உள்ளார். அதன் பின்னர் பிரதமர் தரப்பில் சில மெசேஜ் கொடுக்கப்பட்டு உள்ளதாகவும், அதில் ஒன்று தான் ஆளுநருடான சந்திப்பு என்கின்றனர் நடப்பதை நன்கு அறிந்தவர்கள். சுருக்கமாக சொன்னால் ஆகஸ்ட் 6ம் தேதி மோடியிடம் மெசேஜை பெற்று ஆளுநருடன் மீட்டிங் என்று இருந்திருக்கிறார் ரஜினிகாந்த்.
அதாவது, ஆளுநரை நேராக சென்று பாருங்கள், அவர் உங்களுக்காக நேரம் ஒதுக்கி இருக்கிறார் என்பதுதான். ரஜினியை சந்திக்க ஆளுநர் அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்திருக்கிறார்…. அரைமணி நேரம் சந்திப்பு அரங்கேறி இருக்கிறது.
இதில் முழுக்க முழுக்க அரசியல் பேசப்பட்டது உண்மை, ஆனால் நான் அரசியலுக்கு வரவே மாட்டேன் என்று அழுத்தம் திருத்தமாக கூறி உள்ளார் ரஜினிகாந்த். அரசியலுக்கு வராமல் அரசியல் பேசினார் என்றால்… பாஜகவுக்கு ஆதரவாக பேசுகிறார், ஆதரிக்கிறார் என்று கூறுகின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
அவர்கள் இந்த சந்திப்பு பற்றி மேலும் கூறும் சில விஷயங்கள் தமிழக அரசியல் களத்தில் கவனிக்கப்பட வேண்டிய ஒனறாக இருந்திருக்கிறது. தேசிய பாஜக தலைமையின் அனைத்த கவனங்களும் 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலை மையப்படுத்தி உள்ளது. இப்போது இருந்தே தயாராகி வரும் அக்கட்சி தென்மாநிலங்களில் வலுவான இடத்தை பிடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது.
அதற்காக ரஜினியை பிரதமர் மோடிக்கான ஆதரவு பிரச்சாரத்தில் களம் இறக்கலாம் என்று முடிவெடுத்து இருக்கிறதாம். அரசியலுக்கு வராத ரஜினி, 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு சப்போர்ட் செய்து ஆதரவு தர வேண்டும் என்பதே…
இதை ரஜினியின் கவனத்துக்கு உரிய முறையில், உரிய மரியாதையுடன் கொண்டு செல்ல வேண்டும் என்பதால் ஆளுநர் மாளிகைக்கு அழைத்து சொல்லப்பட்டு உள்ளதாம். மோடிக்காக ரஜினியின் பிரச்சாரத்தில் பயன்படுத்துவது என்பது பாஜக தலைமையின் திட்டமாக இருந்தாலும் அதற்கு ரஜினியின் தரப்பில் இருந்து எந்த சிக்னலும் கிடைக்கவில்லையாம்.
வெகு விரைவில் ரஜினியிடம் இருந்து பாசிட்டிவ்வான தகவல் வரும் என்று பாஜக தரப்பில் எதிர்பார்த்துள்ளதாக தெரிகிறது. மொத்தத்தில் 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கான காய் நகர்த்தல்கள் தான் ஆளுநர், ரஜினி சந்திப்பு என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்…!