எமர்ஜென்சி கதவும், சுய அறிவு உள்ளவர்களும்..! வீடியோவில் பொளந்து கட்டிய தயாநிதி
சென்னை: சுய அறிவு உள்ளவர்கள் எமர்ஜென்சி கதவை திறக்க மாட்டார்கள் என்று பாஜக தமிழக தலைவர் அண்ணாமலையில் செயலை திமுக எம்பி தயாநிதி மாறன் வீடியோ போட்டு விமர்சித்துள்ளார்.
சென்னையில் இருந்து திருச்சிக்கு கடந்த டிசம்பர் 10ம் தேதி விமானம் ஒன்று சென்றது. அதில் பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் பயணித்தனர். விமான பயணத்தில் அவசர கதவு(emergency exit) திறந்ததாக தகவல் வெளியாகி பரபரப்பானது.
இந்த விவகாரத்தில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ஒரு விளக்கம் அளித்து இருந்தார். அதில் பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா தவறுதலாக அவசர வழி கதவை திறந்ததாகவும், அதற்காக அவர் மன்னிப்பு கேட்டதாகவும் கூறி இருந்தார்.
ஆனால் இந்த சம்பவத்தில் அண்ணாமலை சொன்ன தகவல் வேறு மாதிரியாக இருந்தது. சரியாக மூடாமல் இருந்த கதவை தான் அவர் விமான பணிப்பெண்ணிடம் சுட்டிக்காட்டினார் என்று தெரிவித்து இருந்தார். இதுதொடர்பாக விமர்சனங்கள் நித்தம், நித்தம் வெளி வந்து கொண்டிருக்க, திமுக எம்பி தயாநிதி மாறன் வெளியிட்டு உள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டுவிட்டரில் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் தயாநிதி மாறன் கூறியதாவது:
வணக்கம்… வாழ்க தமிழ்நாடு, நான் இண்டிகோ விமானத்தில் கோவை சென்று கொண்டிருக்கிறேன். நான் விமானத்தின் அவசர கால கதவு பக்கத்தில் இருக்கும் இருக்கையில் அமர்ந்துள்ளேன். ஆயினும், நான் அவசரகால கதவை திறக்கபோவதில்லை.
ஏனென்றால், நான் மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் அந்த கதவை திறப்பதால் பயணிகளுக்கு ஆபத்து. சுய அறிவு உள்ளவர்கள் யாரும் இந்த காரியத்தை செய்யமாட்டார்கள்.
அத்துடன் எனக்கு மட்டுமில்லாமல் அனைத்து பயணிகளுக்கும் பயண நேரம் 2 மணிநேரம் மிச்சமாகும் என தெரிவித்துள்ளார். தயாநிதி மாறனின் இந்த வீடியோ இணையத்தில் ஏக வைரலாகி வருகிறது.