பிக்பாஸ் பெயரில் புது மோசடி…? மக்களே… உஷார்…!
பிக்பாஸ் சீசனுக்கான போட்டியாளர்கள் தேர்வு என்று வரும் அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
தமிழ் மட்டுமல்ல… தென்னிந்திய மொழிகளில் அதிகம் பேர் கண்டு ரசித்த நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ்தான். தமிழில் இதை தொகுத்து வழங்கியது கமல்ஹாசன். அதே போல, சேட்டன்கள் மாநிலத்தில் பிக்பாசை நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்குகிறார்.
அவர் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3வது சீசன் நிகழ்ச்சி ஏக பிரபலம். பரபரப்பான இந்த நிகழ்ச்சி 95 நாட்களுக்கு பின்னர் கொரோனாவின் 2வது அலை எதிரொலியாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
அதில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் வெற்றியாளரை செலக்ட் செய்ய விரைவில் ஓட்டெடுப்பு நடக்க இருக்கிறது. இந் நிலையில் பிக்பாஸ் 4வது சீசனுக்காக மலையாளத்தில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் செலக்ட் செய்யப்படுவதாக ஒரு மோசடி அரங்கேறி வரும் விவரம் இப்போது வெளியாகி இருக்கிறது.
தொலைபேசியில் அழைப்பு விடுக்கும் மர்ம நபர்கள் உண்மையாகவே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் போன்று பேசுகின்றனராம். எனவே இந்த போன்கால்களை உண்மை என்று கூறி யாரும் தங்களின் தகவல்களை பரிமாற வேண்டாம் என்று பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறிவித்து உள்ளனராம்.
பிக்பாஸ் 4வது சீசனுக்காக போட்டியாளர்கள் தேர்வு என்பது இன்னமும் நடத்தவில்லை, அப்படி யாராவது அணுகினால் நம்ப வேண்டாம், எச்சரிக்கையாக இருங்கள் என்றும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.