தமிழகத்தில் சாவர்க்கர் பெயரில் தோன்றிய தெரு…! மக்கள் ஷாக்
கோவில்பட்டி: தமிழகத்தில் வீர சாவர்க்கர் தெரு என்ற பெயரில் ஒரு தெரு முளைத்திருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
மற்ற மாநிலங்களில் ஆழமாக காலூன்றிவிட்ட பாஜகவால் தமிழகத்தில் அவ்வாறு நடக்க முடியவில்லை. பெரியார் மண் என்று அறியப்படுவதே அதற்கு காரணம். ஆனாலும் எப்படியாவது உள்ளே நுழைந்துவிட பாஜகவும் முயற்சித்துக் கொண்டே இருக்கிறது.
இப்படிப்பட்ட சூழலில், தமிழகத்தில் வீர சாவர்க்கர் பெயரில் ஒரு தெரு முளைத்திருக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் தான் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட 20வது வார்டில் வீர சாவர்க்கர் தெரு என்று ஒரு தெருவுக்கு பெயர் வைக்கப்பட்டு உள்ளது. மறைந்த ஆர்எஸ்எஸ் தலைவர் வீர சாவர்க்கர் பெயர் சூட்டப்பட்ட தெருவின் பெயர் அங்குள்ள சுவற்றில் எழுதி வைக்கப்பட்டு உள்ளது.
வீர சாவர்க்கர் தெரு என்ற பெயரை கண்ட மக்கள் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டனர். ஒரே எண்ண ஓட்டத்தில் இருந்த அவர்கள் அனைவரும் கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்துக்கு தகவல்களை கூறினர்.
அவ்வளவு தான்… டக்கென்று வந்த நகராட்சி அலுவலர்கள் தெரு பெயரை உடனடியாக அழித்தனர். எந்த அனுமதி பெறாமல் தெருவுக்கு பெயர் சூட்டப்பட்டதால் அழித்துவிட்டதாக விளக்கம் அளித்துள்ளனர்.
இப்படி ஒரு செயலை யார் செய்தது என்பது தெரியவில்லை. நகராட்சி மக்களும் கொதிப்பில் உள்ள நிலையில், இது பற்றி புகார் தந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.