திமுகவுக்கு டிமாண்ட் வைக்கும் திருமாவளவன்….! ஸ்டாலின் சந்திப்பின் பின்னணி
சென்னை: மேயர், மாவட்ட தலைவர் பதவிகளுக்கு நேரடியாக தேர்தல் நடத்த வேண்டும் என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தி இருக்கிறார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பட்டியலினத்தோர் ஆணையம் அமைக்க வேண்டும் என்பது விசிக நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறது. இந்த ஆணையத்தை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதல்வர் கூறி உள்ளார். அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.
தமிழகத்தில் ஓபிசி பட்டியலில் உள்ள சில சாதிகளின் பெயர்கள் மத்திய அரசின் பிசி பட்டியலில் இல்லாமல் உள்ளன. அதன் காரணமாக அவர்களால் மத்திய அரசு கல்லூரிகளில் இட ஒதுக்கீடு மூலம் சேர முடியாத நிலை இருக்கிறது.
அந்த சாதிகளின் பெயர்களை மத்திய அரசின் பிசி பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கையை முதல்வரிடத்தில் வைத்து உள்ளோம்.
ராஜிவ்காந்தி பெயரிலேயே ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது தொடர்ந்து வழங்கப்பட வேண்டும். பெயரை மாற்றி இருப்பது அநாகரிகமானது.
உள்ளாட்சி தேர்தலில் மேயர் பதவிகள், கவுன்சிலர்கள் மூலம் தேர்ந்தெடுக்கும் முறையை மாற்ற வேண்டும். மேயர், மாவட்ட தலைவர்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மேகதாது அணை விவகாரத்தில் இரட்டை வேடம் மட்டுமல்ல, பலவித வேடங்களை போடுபவர்கள். மாநிலத்துக்கு மாநிலம் அவர்கள் கருத்து கூறுவார்கள். ஆனால் மக்கள் அதை ஏற்க மாட்டார்கள்.
இந்திய மகளிர் அணியில் இடம்பெற்றுள்ள பட்டியலின வீராங்கனை மந்தனா வீடு முன்பு நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் விளையாட்டிலும் எந்த அளவுக்கு சாதி அரசியல் உள்ளது என்பதை காட்டி உள்ளது. இதன் மூலம் உலக அரங்கில் இந்தியாவுக்கு தலைகுனிவு ஏற்பட்டு உள்ளது என்று கூறினார்.