ஷ்ஷ்ஷ்….!! யப்பா… முடியல…! ரஜினி அரசியல் பிரவேசத்தில் திடீர் டுவிஸ்ட்டாம்..!
சென்னை: வரும் நவம்பர் நடிகர் ரஜினி கட்சி துவங்குவது உறுதி, மதுரையில் தான் கட்சியின் முதல் மாநாடு என அவருக்கு நெருக்கமானவர்களிடம் இருந்த தகவல்கள் வெளியாகி, ரசிகர்கள் குஷியோ, குஷியில் இருக்கின்றனர்.
25 ஆண்டுகளை கடந்தும் இன்னும் பேச்சளவிலும், பேப்பரிலும் மட்டுமே இருப்பது தான் ரஜினியின் அரசியல் பிரவேசமும், அவர் கட்சி ஆரம்பிப்பதும். இப்போது அதற்கு தெளிவான பதில் ரசிகர்களிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக ஒரு தகவல் உலா வந்து கொண்டு இருக்கிறது.
நான் கட்சி தொடங்குவது உறுதி, 2021ம் ஆண்டு தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டி என்று அவர் அறிவித்தார். மீன் குழம்பு, சர்க்கரை பொங்கல் பானை என்று உதாரணமும் பேசிவிட்டார். அதை வைத்து, அப்படி இருக்கும், இப்படி இருக்கும் என்று ரசிகர்கள் இன்னமும் கணக்கு போட்டு கொண்டு இருக்கிறார்கள்.
நல்லா குறிச்சு வச்சுக்கோங்க… எந்த ஒரு விஷயம் என்றாலும் கமல் டுவிட்டரோ, அறிக்கையே விட்ட பிறகு தான் ரஜினிகாந்த் அறிக்கை விடுவார் என்பது இப்போதும் பேசப்பட்டு வருகிறது. ஆனால், அதை கொஞ்சம் மாற்றி நேற்று ஒரு காரியம் செய்திருக்கிறார் ரஜினிகாந்த்.
அதுதான் திமுகவின் புதிய பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டிஆர் பாலுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. இது வழக்கமான ஒன்று தான் என்று எண்ணிவிட முடியாது. கூட்டணி கட்சி தலைவர்களே வாழ்த்து தெரிவிக்கும் முன்பாக, முந்திக் கொண்டு வாழ்த்து கூறி உள்ளார். இதை எளிதாக கடந்துபோய்விட முடியாது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
இது ஒருபக்கம் இருக்க… அதோடு வேறு ஒரு உள்தகவலையும் ரஜினிக்கு நெருக்கமானவர்கள் உலவவிட்டுள்ளனர். அதுதான் நவம்பரில் கட்சி உதயம், மதுரையில் முதல் அரசியல் மாநாடு. அவர் அரசியலுக்கு வருவது உறுதி… முன் வைத்த காலை பின்னால் வைக்க மாட்டார்.
கட்சி தொடங்குவதற்கான 90 சதவீதம் பணிகள் ஏற்கனவே முடிந்துவிட்டன. இடையில் கொரோனா புகுந்து ஆட்டம் போட… அதனால் தான் தாமதம், இப்போது அனைத்தும் ரெடி, விரைவில் வெளியாகும் கட்சியின் பெயர் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். ஆனால் நடக்கட்டும்… பார்க்கலாம்…. என்று எப்போதும் போல ஒரு பிரிவினர் இப்போதும் கதைத்து வருகின்றனர்… மொத்தத்தில் ‘அண்ணாத்த’ படம் வரும்… ‘அண்ணாத்த’ வருவாரா…?