கொரோனா இருக்கட்டும்...! இனிமேல் ஓட்டல்களில் உட்கார்ந்து சாப்பிடலாம்..! இப்போ தான் நிம்மதி
சென்னை: கொரோனா ஒரு பக்கம் இருந்தாலும் இனி ஓட்டல்களில் அனைவரும் உட்கார்ந்து சாப்பிடலாம்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா உச்சத்தில் பதிவாகி வருகிறது. இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,132 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த முழு முடக்கத்தை ஆகஸ்ட் 31ம் தேதி வரை தமிழக அரசு நீட்டித்துள்ளது.
ஆகஸ்ட் மாதம் அனைத்து ஞாயிற்று கிழமையும் தளர்வுகள் இல்லாமல் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஞாயிற்றுக் கிழமைகளில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையில் சில தளர்வுகளும் நடைமுறைக்கு வந்துள்ளன.
இந் நிலையில் சென்னையில் இரவு 7 மணி வரை ஓட்டலினுள் அமர்ந்து சாப்பிட விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டிற்கான தளர்வு அமலுக்கு வந்துள்ளது. ஆக. 1 முதல் சென்னையில் ஓட்டல்களில் சமூக இடைவெளியை கடைபிடித்து 50 சதவிகித இருக்கைகளை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தளர்வு அறிவித்தது. இதையடுத்து ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் இன்று முதல் உட்கார்ந்து சாப்பிடும் முறையை நடைமுறைப்படுத்தி உள்ளது.