கமலுக்கு டாட்டா… விலகிய முக்கிய நிர்வாகிகள்..! காலியாகும் மக்கள் நீதி மய்யம்…!
சென்னை: ஜனநாயகம் இல்லை என்று கூறி மக்கள் நீதி மய்யத்தின் துணை தலைவர் மகேந்திரன் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் ஒட்டு மொத்தமாக கட்சியில் இருந்து விலகி உள்ளனர்.
ரஜினி எப்போது வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சமயத்தில், யாரும் எதிர்பாராமலேயே கட்சியை ஆரம்பித்தார் கமல்ஹாசன். தமது கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் என்று பெயரும் வைத்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிட்டு குறிப்பிடத்தக்க வாக்குகளை பெற்று அசர வைத்தது.
அதே வேகத்தில் தற்போது முடிந்த சட்டசபை தேர்தலிலும் களம் இறங்கியது. கோவை தெற்கில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கில் களம் கண்டார். ஆனால் அவர் உள்பட அனைத்து தொகுதிகளிலும் அக்கட்சி வேட்பாளர்கள் மண்ணை கவ்வினர். விரைவில் கட்சியில் மறு சீரமைப்பு கட்டாயம் என்று கமல்ஹாசனும் எச்சரிக்கை விடுத்து இருந்தார்.
இந் நிலையில் கட்சியின் துணை தலைவர் மகேந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்துள்ளனர். கட்சியில் வெளிப்படைத்தன்மை இல்லை, ஜனநாயகம் கிடையாது, சிலரால் தவறாக வழிநடத்தப்படுகிறார் என்று குற்றம்சாட்டி உள்ளார்.
வேட்பாளர் தேர்வு, தொகுதி பங்கீடு, கூட்டணி விவகாரம் என அனைத்து கட்டங்களிலும் குழப்பத்தை ஏற்படுத்தி வந்த சங்க்மா சொலியூசன்ஸ் தலைவர், கமல்ஹாசனின் ஆலோசகர் கையில் தேர்தல் பொறுப்புகளை ஒப்படைத்ததால் கட்சி முழுமையாக தோல்வியை சந்தித்தது என்றும் பரபர குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.
மகேந்திரன் மட்டுமல்ல மேலும் பல முக்கிய நிர்வாகிகளும் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து bye bye சொல்லி உள்ளனர். துணைத் தலைவர் பொன்ராஜ், பொது செயலாளர்கள் சந்தோஷ்பாபு, சிகே குமாரவேல், மவுரியா, முருகானந்தம், நிர்வாக குழு உறுப்பினர் உமாதேவி உள்ளிட்டோரும் விலகி உள்ளனர்.