TN 99 W 5577…. ரகசிய பூஜை, சிறப்பு ஹோமம் செய்த எஸ்பி வேலுமணி…?
சென்னை: எதிரிகளை வெல்ல….திருச்செந்தூரில் சிறப்பு பூஜை, ஹோமம் நடத்தி உள்ளார் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி என அதிமுக மேல்மட்டத்தில் தகவல் கசியவிடப்பட்டு உள்ளது.
எஸ்பி வேலுமணியை குறித்து 60 இடங்களில் நேற்று லஞ்சஒழிப்பு துறை ரெய்டு நடத்தி அதிரடி காட்டி இருக்கின்றனர். ஆனால் கிடைத்தது என்னவோ வெறும் 13 லட்சம் ரூபாயும், பரிவர்த்தனை ஆவணங்கள், ஹார்டு டிஸ்க் என கைப்பற்றப்பட்டவை குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநரகம் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டது.
நிலைமைகள் இப்படி இருக்க வேலுமணி இன்று எங்கே போனார் என்பது பற்றிய தகவல்கள் அதிமுக வட்டாரத்தில் முக்கியமாக விசாரிக்கப்பட்டு இருக்கின்றன.
இது குறித்து அதிமுக முக்கிய புள்ளிகள் தரப்பில் கசியவிடப்பட்டு உள்ள தகவல்கள் வருமாறு: வேலுமணியும், அவரது அண்ணன் மகன் விஜய்யும் இன்று காலை சென்னையில் இருந்து விமானத்தில் தூத்துக்குடி வந்திருக்கின்றனர்.
அவர்களுக்காக விமான நிலையத்தில் TN 99 W 5577 (கோயமுத்தூரில் பதிவு செய்யப்பட்ட எண்) என்ற வெண்மை நிற பிஎம்டபிள்யூ சொகுசு கார் நிறுத்தி வைக்கப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து அவர்கள் பிக்கப் செய்து கொண்டு வாகனம் பறந்திருக்கிறது. பின்னர் மாலை 3.25 மணியளவில் இதே கார் விமான நிலையத்துக்கு வந்திருக்கிறது. காரில் இருந்து வேலுமணியும், விஜய்யும் இறங்கி சென்று இருக்கின்றனர்.
அப்போது குழுமியிருந்த செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரெய்டு குறித்து கட்சி தலைமையிடம் பேசிவிட்டு 2 நாளில் பத்திரிகையாளர்களை சந்திப்பதாக கூறிவிட்டு வணக்கம் வைத்துவிட்டு கிளம்பிவிட்டார்.
தூத்துக்குடிக்கு வந்ததன் காரணம்…. திருச்செந்தூர் சுப்ரமணியசாமி கோயிலில் உள்ள சத்ருசம்ஹார மூர்த்தி சந்நிதியில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள பூஜைக்கு வந்திருக்கிறார் என்கின்றனர் அதிமுகவினர்.
அதாவது… இந்த சத்ருசம்ஹார மூர்த்திக்கு ஹோமம், பூஜைகள் உள்ளிட்டவை செய்யவே வந்துள்ளார் என்று காதை கடிக்கின்றனர். திருச்செந்தூரில் உள்ள ஒரு மடத்தில் இந்த பூஜை, ஹோமம் நடந்துச்சு. 1 மணி நேரம் பூஜையில் கலந்துவிட்டு வேலுமணியும், விஜய்யும் புறப்பட்டுவிட்டனராம்.
இந்த பூஜைக்கு பின்னர் தான் பழையபடி எஸ்பி வேலுமணி உற்சாகமானதை பார்க்க முடிந்தது. அது என்ன… சத்ருசம்ஹார மூர்த்தி என்றும், அதன் மகிமை பற்றியும் அதிமுகவினர் மத்தியில் பேச்சுகள் மையம் கொண்டு இருக்கின்றன.
எதிரிகளை வலுவிழக்கு செய்து, ஜெயத்தை தரக்கூடிய சக்தியை தரவல்ல மூர்த்தி என்றும், டெல்லி வரை இதன் மகிமையை பலரும் அறிந்தவர்கள் என்றும் அதிமுகவினர் கூறி உள்ளனர். சோதனை, இக்கட்டான நிலையில் சத்ருசம்ஹார பூஜை, ஹோமம் செய்தால் அனைத்து பிரச்னைகளும் தவிடு பொடியாகி விடும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் அண்ணன் அசால்ட்டு காட்டுவார் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.