Sunday, May 04 12:04 pm

Breaking News

Trending News :

no image

ஆக்சிஜன் வேணுமா..? இந்த 'நம்பருக்கு' டயல் பண்ணுங்க…!


சென்னை: தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகள் ஆக்சிஜன் தேவை என்றால் 104 என்ற அவசர எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று உச்சத்தில் இருக்கிறது. திரும்பிய பக்கம் எல்லாம் கொரோனாவின் பேச்சுகள் தான் ஓடிக் கொண்டு இருக்கின்றன. வட இந்தியாவில் நிலைமை தலைகீழாக உள்ளது. தடுப்பூசி போடும் பணிகள் வேகம் எடுத்தாலும் தொற்றுகள் குறையவில்லை.

மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிய, பெரும்பான்மையானவர்களுக்கு ஆக்சிஜன் தேவைப்படுகிறது. ஆனால் தலைநகர் டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இல்லாததால் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர்.

ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ள மாநிலங்களுக்கு விமானப்படைகள் மூலம் ரயில்கள் மூலம் ஆக்சிஜன் டேங்கர் லாரிகள் அனுப்பப்பட்டு வருகின்றன. இந் நிலையில் தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தேவைக்கு 104 என்ற அவசர எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின் விவரம் வருமாறு: கோவிட்-19 தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பதால், மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்கள் போன்ற கோவிட்- 19 சிகிச்சை அளிக்கும் இடங்களில் மருத்துவ ஆக்சிஜனுக்கான தேவை உயருமென எதிர்பார்க்கப்படுகிறது.

மாநிலத்திலுள்ள ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், அதன் உற்பத்தியை அதிகரிப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிய அறிவுறுத்தப்பட்டுள்ளன. ஆக்சிஜன் கிடைப்பதை அதிகரிப்பதற்காக, மருத்துவ ஆக்சிஜனை ஏற்றிச்செல்லும் டேங்கர் லாரிகள் விரைவாக மருத்துவமனைகளை வந்தடைய, தேவைப்படும் இடங்களில் காவல்துறையின் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

 மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்கள் ஆகியவற்றுக்கு மருத்துவ ஆக்சிஜன் வழங்கல் தொடர்பான சிக்கல்களைத் தீர்க்க, மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரின் கீழ் 24 மணி நேரமும் இயங்கும் கால் சென்டரை அரசு ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ ஆக்சிஜன் பற்றாக்குறையினை எதிர்கொள்கிற தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்கள் உடனடியாக 104 என்ற எண்ணில் உதவிக்கு அழைக்கலாம் என்று அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Popular