சிதம்பரத்தை தனி மாநிலம் ஆக்குங்க…! காங். தலைவரின் ‘திடீர்’ ஆசை
சென்னை: எனக்கு சிதம்பரத்தை தலைநகராக வைத்து தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி கூறி உள்ளார்.
தமிழகத்தை பிரித்து கொங்குநாட்டை அமைக்க வேண்டும் என்று பேச்சுகள் இணையத்தில் பரவி வருகிறது. தமிழகத்தை சாதி ரீதியாக பிரிக்கும் பாஜகவின் சூழ்ச்சி தான் இது என்று தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
இந் நிலையில் சிதம்பரத்தை தலைநகராக வைத்து தனி மாநிலம் வேண்டும் என்று தமக்கு ஆசை இருப்பதாக கூறியிருக்கிறார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி.
கொங்குநாடு விவகாரம் குறித்து அவர் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கொங்குநாடு என ஒன்று அமையாது. அது ஒரு கற்பனையே. அப்படியே அமைந்தால் அத்தோடு முடிந்துவிடுமா..?
ஏகப்பட்ட நிலப்பரப்புகள் பிரிந்து நாடுகள் உருவாகும். நமக்கு தான் அழகான தமிழ்நாடு என்ற நிலப்பரப்பு உள்ளது. அதுவே போதும். கோவை, திருச்சி நகரங்களை தலைநகராக்க வேண்டும் என்று கோரிக்கைகள் உள்ளன.
வரலாற்றில் சிறப்பு வாய்ந்த சென்னை தலைநகராக இருக்கும் போது மற்ற தலைநகரங்கள் தேவையில்லை. சிதம்பரத்தை தலைநகராக கொண்டு தனி மாநிலம் வேண்டும் என்று எனக்கும் ஆசை உள்ளது. அதற்காக வேண்டும் என்றும் சொல்லலாமா…?
எல்லாமே கேலிக்கூத்துதான். முக்கிய பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பவே இதுபோன்ற உத்தி கையாளப்படுகிறது. தமிழகத்தை பிரிப்பது இயலாத காரியம், மக்களை இதை ஏற்கமாட்டார்கள். காங்கிரஸ் இது போன்ற விஷயங்களை வன்முறையாக கண்டிக்கிறது என்று கூறி உள்ளார்.