இருப்பது உள்ளே… ஜெயித்தது வெளியே….!
சிறைக்குள் இருந்தாலும், தாம் நினைத்ததை சாதித்து லோக்சபா தேர்தல் 2024ல் செய்து காட்டி அனைவரையும் அசத்தி இருக்கிறார் செந்தில் பாலாஜி.
திமுகவின் லோக்சபா தேர்தல் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியானது. எந்த தொகுதியில் யார் வேட்பாளர்கள் என திமுகவினர் மட்டுமல்லாது, மற்ற கட்சியினரும் ஆர்வமுடன் எதிர்பார்த்திருந்தனர்.
பல்வேறு எதிர்பார்ப்புகள் இருந்தாலும் கோவையில் யார் திமுக வேட்பாளர் என சொந்த கட்சியினரே வெயிட்டிங்கில் இருந்தனர். அதற்கு ஒரு காரணம் செந்தில் பாலாஜி. சிறைக்குள் இருந்தாலும் தமது ஆதரவாளர்களையும், கட்சியினரையும் இன்னமும் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார்.
தேர்தல் நேரம், எப்படியும் ஜாமீனில் வெளிவந்தாக வேண்டும் என்று சட்ட போராட்டம் ஒரு பக்கம் இருந்தாலும் கட்சி வேட்பாளர் பட்டியலில் கோவைக்கு அவர் பரிந்துரைத்த முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார் பெயர் டிக் அடிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
கணபதி ராஜ்குமார் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர். முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணிக்கு நெருக்கமானவராக அறியப்பட்டவர். மேயர் பதவி காலத்தில் அவருடன் ஏற்பட்ட உரசல் பின்னர் வேறு ரூபத்தில் நெருக்கடியாக மாற, செந்தில் பாலாஜியின் பார்வையில் பட்டு, தம்மை திமுகவில் இணைத்துக் கொண்டார்.
தற்போது கோவை மாவட்ட அவைத்தலைவராக இருக்கிறார் கணபதி ராஜ்குமார். அதை ஏற்று கட்சி தலைமையும் வேட்பாளராக அறிவித்து இருக்கிறது. எப்படியும் இவரை வெற்றி பெற வைத்தே ஆக வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கிறாராம் செந்தில் பாலாஜி.
திமுக வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்பட்டுவிட கட்சியினர் ஏக குஷியில் உள்ளனராம். 100 சதவீதம் வெற்றி என்று புன்னகையுடன் தேர்தல் பிரச்சார களத்தில் இறங்க தயாராகி வருகின்றனர் திமுகவினர்.
அதே நேரம் அதிமுகவின் மூவ் எப்படி இருக்கும்? எஸ்பி வேலுமணியின் பிளான் என்ன என்பது தான் சஸ்பென்சாக இருக்கிறது என்கின்றனர் அரசியல் புள்ளிகள்.