கொரோனா தடுப்பூசி போட்டால் ஆண்மைக்குறைவா..? பரபர ஆய்வு முடிவு
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் ஆண்மைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளது.
கொரோனாவை வெல்லும் பேராயுதம் தடுப்பூசிக்கு மட்டுமே உண்டு உலகம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து நாடுகளும் கொரோனா தடுப்பூசி மற்றும் அதனை பயன்படுத்துவதில் அதிக அக்கறை காட்டி வருகின்றன.
தடுப்பூசிகளை மக்கள் செலுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக பல நாடுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. ஆனால் இந்த கொரோனா தடுப்பூசி பற்றிய உண்மை எந்தளவுக்கு அனைவருக்கும் தெரிய படுத்தப்படுகிறதோ அதே அளவுக்கு இஷ்டம் போல கற்பனைக்கு எட்டாத தகவல்களும் உலாவி வருகின்றன.
குறிப்பாக உலக நாடுகளில் பயன்படுத்தப்படும் மாடர்னா, பைசர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் ஆண்மை குறைவு ஏற்படும், விந்தணுக்களின் எண்ணிக்கையில் சேதாரம் என்றும் தகவல்கள் மக்களை ரொம்பவே குழப்பத்தில் கொண்டு போய்விட்டிருக்கின்றன.
இந்த குழப்பங்களுக்கு எல்லாம் இப்போது விடை கிடைத்துள்ளது. ஜமா (Jama) என்ற இதழ் நடத்திய ஆய்வில் இந்த நிம்மதியான முடிவுகள் வெளிவந்து இருக்கின்றன. ஆய்வில் மொத்தம் 18 வயது முதல் 50 வயது வரையான திடகாத்திரமான ஆண்கள் கலந்து கொண்டனர்
அவார்களுக்கு மாடர்னா, பைசர் தடுப்பூசி செலுத்தப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டு 7 நாட்களுக்கு ஒரு முறை விந்தணு பரிசோதனை நடத்தப்பட்டது. 2வது டோஸ் செலுத்திக் கொண்ட பின்னர் 70 நாட்கள் கழித்து மேலும் ஒரு பரிசோதனை நடத்தப்பட்டது.
பல கட்ட ஆய்வு முடிவுகளின் படி கொரோனா தடுப்பூசிக்கும், ஆண்மைக் குறைவு, விந்தணுக்கள் பாதிக்கப்படாது என்றும் தெரிய வந்திருக்கிறது. இதன்மூலம், கொரோனா தடுப்பூசி குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.