ஜூன் 7க்கு பிறகு 14 மாவட்டங்களில் ‘மினி ஊரடங்கு’..? தமிழக அரசு 'ஸ்மார்ட்' பிளான்
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு இன்னும் குறையாமல் இருக்கும் 14 மாவட்டங்களில் கடுமையாக ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
கட்டுக்கடங்காமல் இருக்கும் கொரோனா பரவலை குறைக்க வரும் 7ம் தேதி வரை முழு லாக்டவுன் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. காவல்துறை கண்காணிப்பு, பரிசோதனைகள் எண்ணிக்கை என்று தமிழக அரசு மும்முரமாக இயங்கினாலும் கிட்டத்தட்ட பல மாவட்டங்களில் கொரோனா தொற்றுகள் எண்ணிக்கை இன்னமும் கவலை தரும் விஷயமாகவே உள்ளது.
இந் நிலையில் ஜூன் 7க்கு பிறகு கொரோனா லாக்டவுனில் தமிழக அரசின் பிளான் என்னவாக இருக்கும் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. அதாவது கொரோனா தொற்று குறைவான மாவட்டங்கள், நாள்தோறும் அதிக பாதிப்புகள் பதிவாகும் மாவட்டங்கள் என தமிழக அரசு பிரித்து அதன்படி சில கட்டுப்பாடுகளையும், சில தளர்வுகளையும் அறிவிக்கலாமா என்று யோசித்து வருவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக பாதிப்புகள் குறைவாக கண்டறியப்பட்டுள்ள பெரம்பலூர், புதுச்கோட்டை, வேலூர், நெல்லை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இது தவிர்த்து கோவை, கடலூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இப்போதுள்ளது போன்று கடுமையான கட்டுப்பாடுகளுடன் லாக் டவுனை நீட்டிக்கலாம் என்று தெரிகிறது. தலைநகர் சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய 2 மாவட்டங்களுக்கு தனி கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அனைத்து வித அம்சங்களையும் கவனமாக பரிசீலித்து அதன் பின்னரே தமிழக அரசு இறுதி அறிவிப்பை வெளியிடும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.