முந்தும் எடப்பாடி…! பதுங்கும் பன்னீர்…! நடுவில் பாஜக பஞ்சாயத்து..!
சென்னை: அதிமுக செயற்குழுக்கூட்டத்தை எப்படியும் தமக்கு சாதகமாக்கிக் கொள்ள இபிஎஸ் செய்யும் அதிரடிகளால் கொஞ்சம் பதுங்க ஆரம்பித்து இருக்கிறார் பன்னீர் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
தமிழக அரசியலில் அதிமுகவின் செயற்குழுக் கூட்டம் தான் இப்போது உற்று பார்க்கும் விஷயம். யாருக்கு பலம் என்பதை நிரூபிக்க இதைவிட வேறு வலுவான களம் இல்லை என்பதை ஓபிஎஸ், இபிஎஸ் இருவருமே உணர்ந்துள்ளனர். ஆகையால், செயற்குழு கூட்டத்தில் ஆதரவை பெறுவதில் பல முட்டி மோதி வருகின்றனர்.
ஆனால், இபிஎஸ்சின் அசுர பாய்ச்சல் கண்டு பொங்கி, பொருமிய ஓபிஎஸ் வேறு ஒரு திட்டத்தில் இருப்பதாக தகவல்கள் கசிகின்றன. 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தாம் தான் எல்லாமும் ஆக இருக்க வேண்டும் என்பதில் உடும்புப்பிடியாக இருக்கிறாராம் இபிஎஸ். முதல்வர் வேட்பாளராக மட்டுமல்ல, கட்சியின் லகானான பொதுச் செயலாளராகவும் தாம் ஆக வேண்டும் என்பதே இபிஎஸ்சின் அக்மார்க் திட்டம் என்கின்றனர் அதிமுகவின் முக்கிய தலைகள்.
அமைச்சர்கள், மாசெ.க்களை தொடர்பு கொள்ளும் இபிஎஸ் ஆதரவாளர்கள் பசையான வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றனராம். மாவட்ட செயலாளர்களுக்கு தேவையானவற்றை செய்து தருவதில் குறையே இருக்காது என்றும் இபிஎஸ் தரப்பில் இருந்து ஸ்ட்ராங்காக சொல்லப்பட்டு உள்ளதாம்.
தமக்கு எதிரான மனநிலையில் உள்ளவர்கள் யார் என்ற பட்டியல் இபிஎஸ் வசம் ஒப்படைக்கப்பட, அவர்களின் லைனில் நேரிடையாகவே பேசி உள்ளாராம் அவர். முதல்வர், பொதுச் செயலாளர் என அனைத்தும் தமது கைகளில் இருக்க வேண்டும் என்பதற்காக மேலும் பக்கா பிளான்களை கைவசம் வைத்திருப்பதாக கூறுகின்றனர் அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள்.
நடப்பது அனைத்தும் நொடிக்கு நொடி ஓபிஎஸ் கவனத்துக்கு கொண்டு போகப்பட்டு இருக்கிறது. இதையடுத்து, இபிஎஸ்க்கு எதிர் அரசியலை தமது மகன் ரவிந்திர நாத்துடன் கூர் தீட்ட ஆரம்பித்துள்ளார் ஓபிஎஸ். இவர்கள் தரப்பில் இருந்தும் அனைத்து மா.செக்கள் உள்ளிட்ட அனைவரிடமும் தொடர் கொள்ளப்பட்டுள்ளதாம்… வாக்குறுதிகள் தரப்பட்டுள்ளதாம்.
ஒரு கட்டத்தில் இபிஎஸ் தரப்பின் வலுவான, பசையான நடவடிக்கைகளை கண்டு ஜெர்க்கான அவரது ஆதரவாளர்களான கே.பி. முனுசாமி, வைத்திலிங்கம் இருவரும் ஓபிஎஸ்சிடம் பேசி உள்ளனர். அதிகாரம், பணபலம், காவல்துறை பலம் என அனைத்தும் அவர்களிடம் உள்ளது, என்ன செய்யலாம்? என்று ஆலோகிக்கப்பட்டதாம்.
இப்போதைக்கு முதல்வர் வேட்பாளர், பொதுசெயலாளர் என்று உடனே அறிவிக்க வேண்டுமா..? தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் உள்ளதால் ஜனவரியில் பொதுக்குழுவை கூட்டி இந்த அறிவிப்புகளை வெளியிட்டு விடலாம் என்று ஓபிஎஸ் கூறியிருக்கிறார்.
இந்த பதில் அப்படியே இபிஎஸ்சின் கவனத்துக்கு கொண்டு போகப்பட்டு உள்ளது. ஆனால், இபிஎஸ் தரப்போ இதை கண்டு கொள்ள வில்லை என்று தெரிகிறது. நடப்பதை அனைத்தும் அணு, அணுவாக கண்டு வரும் டெல்லி பாஜக தலைமையும் இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பை அழைத்து பேசி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இருவருக்கும் இடையேயான பனிப்போர் பற்றிய தகவல்களை கூறிய பாஜக தலைமை, டெல்லி மீடியாக்கள் வரை உங்களின் பிரச்னை எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது என்கிற தொனியில் விசாரித்துள்ளதாம். பிரச்னை பெரிதாக கூடாது என்பது போன்ற சில கருத்துகள் சொல்லப்பட்டுள்ளதாம்…! ஆக மொத்தத்தில் அதிமுகவில் நடக்கும் உள்அரசியல் தான் இப்போது தமிழகத்தில் மெயின் அரசியலாக மாறி உள்ளது என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.