ஒவ்வொரு எம்எல்ஏவுக்கும் ரூ.20 கோடி..! ஆட்சியை கவிழ்க்க பாஜக திட்டம் என புகார்
டெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க ஒவ்வொரு எம்எல்ஏவுக்கும் பாஜக 20 கோடி ரூபாய் பேரம் பேசியுள்ளதாக முதல்வரும், ஆம்ஆத்மி கட்சி தலைவருமான அர்விந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டி உள்ளார்.
தலைநகர் டெல்லியில் அரசியல் களம் கடந்த சில நாட்களாக சூடுபிடித்து வருகிறது. அர்விந்த் கெஜ்ரிவால் அரசின் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இல்லம் உள்ளிட்ட பல பகுதிளில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தி உள்ளது. ஆட்சியை கவிழ்க்கவும், எம்எல்ஏக்களை மிரட்டவும் பாஜக முயற்சிக்கிறது என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந் நிலையில் முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மியின் அனைத்து எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதே நேரத்தில் திடுக்கிடும் தகவல் ஒன்றையும் அவர் வெளியிட்டு உள்ளார். தமது கட்சி எம்எல்ஏக்களுக்கு பாஜக விலைபேசி உள்ளது, ஒவ்வொருக்கும் தலா 20 கோடி ரூபாய் தருவதாக ஆசை காட்டி இருக்கிறது என்று அர்விந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டி உள்ளார்.
இது குறித்து அவர் தமது டுவிட்டரில் கூறி உள்ளதாவது:
டெல்லி அரசை கவிழ்க்க 800 கோடி ரூபாயை வைத்துள்ளனர்- ஒரு எம்எல்ஏவுக்கு 20 கோடி ரூபாய். 40 எம்எல்ஏக்களை கவிழ்க்க விரும்புகிறார்கள்.
இவர்களுக்கு 800 கோடி ரூபாய் எங்கிருந்து வந்தது என்பதை நாட்டு மக்கள் அறிய விரும்புகின்றனர். யார்,எங்கே இந்த தொகையை வைத்திருக்கிறார்கள்?
எங்கள் அரசு நிலையாக உள்ளது. டெல்லியில் நடக்கும் அனைத்து நல்ல திட்டங்களும் தொடரும் என்று கூறி உள்ளார். முன்னதாக ஆம் ஆத்மி எம்எல்ஏ சவுரவ் பரத்வாஜ் என்பவர் தம்மை பாஜக அணுகியதாகவும், ஒவ்வொரு எம்எல்ஏவுக்கும் 20 கோடி ரூபாய் தர முன் வந்ததாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.